உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lucknow: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் இரண்டு பிரதான கட்சிகள் இப்படி அறிவித்துள்ளது, வரும் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக-வை இம்முறை காங்கிரஸ், பிரதான எதிர்கட்சிகளுடன் கூட்டணி வைத்து எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியைக் கூட்டணிக் கணக்கிலிருந்து தவிர்த்துள்ளனர் அகிலேஷும் மாயாவதியும்.
காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்பது குறித்து இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மாயாவதி, “நானாக இருந்தாலும் சரி, அகிலேஷாக இருந்தாலும் சரி, காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதால் பெரும் பயனைப் பெறப் போவதில்லை. இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களை வைத்துப் பார்க்கும்போது, காங்கிரஸ் எங்களுக்குச் சாதகமாக வாக்கு வங்கியைத் திருப்ப முடியாது என்று தெரிகிறது” என்றவர், தொடர்ந்து,
“1996 ஆம் ஆண்டு காங்கிரஸுடன் நான் கூட்டணி வைக்கும்போதும் இதை உணர்ந்தேன். 2017-ல் அகிலேஷ் காங்கிரஸுடன் இணைந்தபோதும் அது மெய்பிக்கப்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸுடன் நாங்கள் கூட்டு சேரப்போவதில்லை. சமாஜ்வாடியும் நாங்களும் கூட்டு சேர்வதன் மூலம் இருவருக்கும் பலன் தரும் வகையில் வாக்குகள் பதிவாகும்” என்று கூறினார்.
மேலும் அவர் பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் ஒப்பிட்டு விமர்சிக்கும்போது, “இரண்டு கட்சிகளும் பாதுகாப்புத் துறையில் பல ஊழல்களை செய்துள்ளன. 1970-களில் காங்கிரஸ் கொண்டு வந்த அவசர நிலையை யாராலும் மறக்க முடியாது. அதே நேரத்தில் இப்போது பாஜக ஆட்சிக் காலம் அவசர நிலைக்கு எந்த விதத்திலும் குறைவானது இல்லை. இருவரும் விஷப் பாம்புகளே” என்று காட்டமாக முடித்துக் கொண்டார்.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகள் தற்போதைக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி போட்டியிடாது என்றும் தெரிகிறது.