காவல்துறையும், வருமான வரித்துறையும் அரசின் ஏவல்துறையாகி விட்டது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், கோவை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
இந்த சம்பவங்கள், இதையத்தை உலுக்குகிறது, பதட்டமாக இருக்கிறது என்பதை விட அதிகமாக கோபம் வருகிறது. ஏனென்றால், இன்னும் அதிகப்படுத்த வேண்டிய பாதுகாப்பை, இன்னும் குறைத்துக்கொண்டு வருவது போல் உள்ளது.
என்ன வேலை நடந்தாலும், மக்களுக்கு மிஞ்சிய வேலை எதுவும் இல்லை. அதனால், தயவுசெய்து காவல்துறையை அரசு ஏவல்துறையாக உபயோகிக்க கூடாது என்பதே எங்கள் கருத்து, மக்கள் பாதுக்காப்பான வாழ்க்கையை பெற வேண்டும், காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிட்டால், சரியாக வேலை செய்பவர்கள் தான் என்றார்.
பின்னர் அவரிடம் தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வருமான வரித்துறையும் இன்னொரு ஏவல்துறையாக மாறி வருகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஏழைகளை அதிகாரிகள் அலைக்கழிக்கக் கூடாது; அவர்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம். ஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசுகள் தான் இங்கு உள்ளன என்று கூறினார்.