This Article is From Mar 26, 2019

கரூரில் போலீஸுடன் தள்ளுமுள்ளு; செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு!

மூன்று பிரிவுகளின் கீழ் உள்ளூர் காவல் துறையினர் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

கரூரில் போலீஸுடன் தள்ளுமுள்ளு; செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு!

செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

கரூர், திமுக மாவட்டப் பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் பாலாஜி. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி, கூட்டணி கட்சி வேட்பாளருடன் சென்றபோது, போலீஸுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மூன்று பிரிவுகளின் கீழ் உள்ளூர் காவல் துறையினர் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்குக் கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி கரூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவர், அம்மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜியுடன் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றுள்ளார். இதையடுத்து ஜோதிமணி, வெகு நேரம் காக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த செந்தில் பாலாஜி, போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்தின் கீழ், செந்தில் பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா தலைமையில் 2011 ஆம் ஆண்டு அமைந்த தமிழக அரசின் கீழ் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தவர் செந்தில்பாலாஜி. ஜெயலலிதா 2016-ல் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவர் தொடர்ந்து ஓரங்கட்டுப்பட்டு வந்தார். சசிகலாதலைமையில் அதிமுக உடைந்தபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்தார் செந்தில் பாலாஜி. சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில்சிறைக்குச் சென்ற பிறகு தினகரன் முகாமில் முக்கியப் புள்ளியாக செயல்பட்டு வந்தார்.

தினகரன் சென்ற ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது, முன்னணி நிர்வாகிகளுள் ஒருவராகநியமிக்கப்பட்டார். திடீரென தினகரனுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக, அமமுக-விலிருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன்ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்தார்.

.