தஞ்சாவூரில் இருக்கும் பெரிய கோயில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோயிலில், தமிழக சிலைத்தடுப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று சோதனை செய்தனர். கோயிலில் உள்ள 41 சிலைகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
கோயிலில் இருந்த உண்மையான சிலைகள் கடத்தப்பட்டு, அதற்கு பதில் போலியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன என்று புகார் வந்ததைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
சிலை குறித்த ஆவணங்களுடன் சென்ற போலீஸ் அதிகாரிகள், கோயில் சிலைகளை சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர். மேலும், கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமும் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது.
தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், போலீஸாரின் இந்த சோதனைக்கு உதவியாக இருந்துள்ளனர். உலக அளவில் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சோதனை நடந்தது பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் இருக்கும் 19 சாமி சிலைகளை போலியானவை என்று புகார் வந்துள்ளது.
விரைவில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் அது குறித்து விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)