This Article is From Dec 18, 2019

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வன்முறை! கல்வீச்சு - தடியடியால் பதற்றம்!!

Citizenship Amendment Act: போராட்டம் காரணமாக டெல்லியில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்குமான கதவுகள் மூடப்பட்டுள்ளன.

போலீசார் மீது செங்கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து தடியடி மற்றும், கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பயன்படுத்தினர்.

New Delhi:

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கிழக்கு டெல்லி பகுதியான சீலாம்பூரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி வாகனம் ஒன்றும், போலீஸ் பூத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. 

செங்கற்கள் வீசப்பட்டதை தொடர்ந்து, போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். சுமார் 2 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருப்பார்கள் என்று கருதப்படுகிறது. வன்முறையில் 2 போலீசார் காயம் அடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. நேரில் பார்த்தவர்கள், அமைதியாக நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறிவிட்டது என்று தெரிவித்தனர். 

இந்த செய்தி தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்...

1. சீலாம்பூர் பகுதியில் போராட்டக்காரர்களை போலீசார் எதிர்கொள்வது போலவும், அவர்களை கட்டுப்படுத்துவது போலவுமான காட்சிகள் வெளியாகி உள்ளன. பெரிய செங்கற்களை போராட்டக்காரர்கள் போலீசார் மீது வீசுவது போன்ற காட்சிகளும் வெளி வந்துள்ளன.

2. பஸ்கள், கார்கள் உள்ளிட்டவை இரும்புக் கம்பிகள், கற்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சாலையில் சில பகுதிகளில் தீ வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. டிராபிக் போலீசின் பைக்குகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

3. சுமார் 12 மணிக்கு சீலாம்பூரில் குவிந்த போராட்டக்காரர்கள், ஜாப்ராபாத்தை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர். அப்போதுதான் வன்முறை வெடித்துள்ளது. அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தியுள்ளனர். 

4. பஸ்களை குறி வைத்து கற்களை வீசியதாக போராட்டக்காரர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் சென்றபோது பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. 

5. மூத்த போலீஸ் அதிகாரி அலோக் குமார், 'போலீசார் காயம் அடைந்துள்ளனர். கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எங்களிடம் மொபைல் வீடியோக்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருகிறோம்' என்றார். 

6. சீலாம்பூரில் தொடர்ந்து பதற்றம் காணப்படுகிறது. டெல்லியில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகள் மூடப்பட்டுள்ன. 

7. டெல்லியில் மிகப்பெரும் அளவில் போராட்டம் பிரச்னையாக மாறியது இது 2-வது முறையாகும். முன்னதாக ஜாமியா மில்லியாவில் கடந்த ஞாயிறன்று நடந்த போராட்டம்  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து போலீசார் தடியடி நடத்தினர்.

8. ஜாமியா மில்லியாவில் நடந்த போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் நேற்று போராட்டம் நடத்தின.

9. இன்று மீண்டும் ஜாமியா மில்லியா மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த முறை போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

10. குடியுரிமை சட்டமானது அண்டை நாடுகளான ஆப்கன், பாகிஸ்தான், வங்க தேசத்திலிருந்து 2015-க்கு முன்னர் வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்கிறது. 

.