முதலில் நீதிபதியின் மனைவியும், பின்னர் அவரது மகனும் சுடப்பட்டுள்ளார்.
Gurgaon: டெல்லிக்கு அருகேயுள்ள குர்கான் நகரில் இன்று பெரும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. இங்கு கூடுதல் அமர்வு நீதிபதியாக இருப்பவர் கிருஷ்ண காந்த் சர்மா. இவருக்கு 38 வயதில் மனைவியும், 18 வயதில் துருவ் என்ற மகனும் உள்ளனர்.
இவர்களது வீட்டில், மகிபால் சிங் என்ற காவலர் உதவிக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அவரை நீதிபதியின் குடும்பத்தினர் தரக்குறைவாக நடத்தியாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 49-வது செக்டாரில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அர்காடியா மார்க்கெட்டுக்கு நீதிபதி தனது குடும்பத்துடன் காரில் வந்துள்ளார்.
அவர்களுடன் காவலர் மகிபால் சிங்கும் இருந்துள்ளார். இதற்கிடையே, பொருட்களை வாங்குவதற்கு மனைவி மற்றும் மகனை காரில் இருக்கச் செய்து விட்டு நீதிபதி கிருஷ்ண காந்த் சர்மா வெளியே சென்றார். இந்த நிலையில், காவலர் மகிபால் சிங் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை வெகு அருகில் நின்று சுட்டுத் தள்ளினார்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பகுதி என்பதால், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர் காவல் நிலையத்திற்கு கையில் துப்பாக்கியுடன் சென்ற மகிபால் சிங், அங்கும் சுட்டு அதிர்ச்சியை உண்டாக்கினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே காயம் அடைந்த நீதிபதியின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளியான மகிபால் சிங் நீதிபதி கிருஷ்ணகாந்த் வீட்டில் 2 ஆண்டுகளாக பணியில் இருந்துள்ளார். அவரை நீதிபதியின் குடும்பத்தினரர் தரக்குறைவாக நடத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான மகிபால் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.