அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மே19 ஆம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், அரவக்குறிச்சியும் ஒரு தொகுதியாகும். இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதற்காக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், “முஸ்லீம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் இதை சொல்லவில்லை, காந்தியின் சிலைக்கு முன்னால் இதைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே
நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன் நான். அப்படி நினைத்துக்கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக்கொடியில் மூவர்ணமும் அப்படியே இருக்கும் ஒரு இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என்பதை மார்தட்டிச் சொல்வேன்” என்று பேசினார்.
கமலின் இந்த கருத்துக்குத் தொடர்ந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. குறிப்பாக பாஜக, வலதுசாரி அமைப்புகள் கமலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கமலின் நாக்கை அறுக்க வேண்டும்” என்று கூறி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில் ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் மற்றும் கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வலதுசாரி அமைப்புகள் கமலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கமல் தற்போது இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், அவர் சென்னையில் இல்லை. அவர் கொடைக்கானலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.