This Article is From May 12, 2020

சிறுமியைப் படுகொலை செய்தவர்களை ஜாமீனில் விடுவிக்க காவல்துறை துணைபோய் விடக்கூடாது: திருமா

கொரோனா நெருக்கடியிலிருந்து அரசு மீண்டபிறகு சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லலாம். முடிந்தால் அப்போது நிதியுதவி செய்யலாம்.

சிறுமியைப் படுகொலை செய்தவர்களை ஜாமீனில் விடுவிக்க காவல்துறை துணைபோய் விடக்கூடாது: திருமா

சிறுமியைப் படுகொலை செய்தவர்களை ஜாமீனில் விடுவிக்க காவல்துறை துணைபோய் விடக்கூடாது: திருமா

ஹைலைட்ஸ்

  • படுகொலை செய்தவர்களை ஜாமீனில் விடுவிக்க காவல்துறை துணைபோய் விடக்கூடாது
  • ஜெயஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு முதல்வர் அறிவிப்பு
  • பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் அரசுக்கு ஏன் இந்த சிரமம்?

சிறுமியைப் படுகொலை செய்தவர்களை ஜாமீனில் விடுவிக்க காவல்துறை துணைபோய் விடக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் - முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றனர். 80 சதவீதம் தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து, குற்றவாளிகள் கலியபெருமாள், முருகன் இருவரையும் கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து அதிமுக நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வலியுறுத்தியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "சிறுமியைப் படுகொலை செய்த கொடியவர்களை #ஜாமீனில் விடுவிக்க காவல்துறை துணைபோய் விடக்கூடாது. உடனே விசாரித்து விரைந்து தண்டிக்க வேண்டும். குற்றவாளிகள் ஆளுங்கட்சி என்பதால் அவர்களைக் காப்பாற்ற ஆளுங்கட்சித் தரப்பில் தலையிட்டால் அதிகாரிகள் இணங்கி விடக்கூடாது.

சிறுமி குடும்பத்திற்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி! பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் அரசுக்கு ஏன் இந்த சிரமம்? கொரோனா நெருக்கடியிலிருந்து அரசு மீண்டபிறகு சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லலாம். முடிந்தால் அப்போது நிதியுதவி செய்யலாம்.

பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறை நாடு, மொழி, இனம், மதம், சாதி போன்ற அனைத்து வரம்புகளையும் கடந்து காலம் காலமாக நடந்தேறும் ஒரு 'உலகளாவியக் கொடூரம்'. அது ஆண்கள் என்னும் உளவியல் கட்டமைத்துள்ள ஆதிக்க வெறியின் வெளிப்பாடாகும். இது மானுடத்தின் பேரிழிவு" என்று அவர் தெரிவித்துள்ளார்.

.