கோயம்புத்தூரின் சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு அடையாளம் தெரியாதவர்களால், ஆள் அரவமற்ற நேரத்தில் இப்படி பெரியார் சிலைக்குக் காவிச் சாயம் பூசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலை இது குறித்த செய்தி வேகமாக பரவியது. அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள திராவிடர் கழகத்தினர், திமுக மற்றும் மதிமுகவினர், பெரியார் சிலைக்கு அருகில் கூடினர். அவர்கள் காவிச் சாயம் பூசியவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அங்கு வந்த போலீஸ் அவர்களை கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தியது.
இன்று காலை பெய்த மழையால் பெரியார் சிலை மீது பூசப்பட்டிருந்த காவிச் சாயம் அகன்றது. மீதமிருந்த காவிச் சாயத்தை கூடியிருந்த தொண்டர்கள் சுத்தப்படுத்தினர்.
இந்நிலையில் இம்மாதிரியான சிலை அவமதிப்புக்கு காவல்துறையினர் சட்ட ரீதியாக நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஈரோட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.