This Article is From Mar 13, 2020

அரசியல் எதிர்காலம்: 3 திட்டங்களை அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

முதல்வராக இருப்பதில் எனக்கு எப்போது நாட்டமும் இல்லை. எனக்கு எவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தும் முதல்வர் பதவியைத் தவிர்த்தவன் நான். கட்சித் தலைவனாக மட்டுமே தொடர்வேன்.

அரசியல் எதிர்காலம்: 3 திட்டங்களை அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

முதல்வராக இருப்பதில் எனக்கு எப்போதும் நாட்டமும் இல்லை - ரஜினிகாந்த்

ஹைலைட்ஸ்

  • முதன் முதலில் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னது 2017 ஆம் ஆண்டில்தான்
  • எவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தும் முதல்வர் பதவியை தவிர்த்தவன் நான்
  • கட்சித் தலைவனாக மட்டுமே தொடர்வேன்

தனது அரசியல் எதிர்காலம் குறித்து 3 திட்டங்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார். 

முன்னதாக, கடந்த 5ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் மிஞ்சியது எனக் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய ரஜினிகாந்த், “என் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள ஊடக நண்பர்களுக்கு என்னுடைய முதல் நன்றி. உங்களுக்குத் தெரியும், இந்த சந்திப்பு எதற்கு என்று.

சில தினங்களுக்கு முன்னர் நான் மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்துப் பேசினேன். அப்போது மீடியாவை சந்தித்து, எல்லாம் நல்லபடியாக நடந்தது. ஆனால், ஒரு விஷயத்தில் திருப்தியில்லை என்று சொன்னேன்.

அதை ஊடகங்கள் பல விதமாகப் பேசினார்கள். மாவட்டச் செயலாளர்கள் இந்த விஷயம் குறித்து எதுவும் சொல்லவில்லை. அதற்கு நான் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுதான் இந்த சந்திப்பு.

அதே நேரத்தில், என்னுடைய வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்பினேன். கட்சி ஆரம்பிக்கும் முன்னரே இதைச் சொல்லிவிட்டேன் என்றால் எல்லோருக்கும் தெளிவு வரும். எனக்கும் தெளிவு வரும்.

1996-லிருந்து 25 வருஷமாக ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், நான் முதன் முதலில் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னது 2017 ஆம் ஆண்டில்தான்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017 ஆம் ஆண்டுதான் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை உருவானது. அப்போது நான், சிஸ்டம் கெட்டுப் போச்சு என்று சொன்னேன். மக்கள் மனதில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று எண்ணினேன். மன மாற்றமில்லாமல் அரசியல் மாற்றம் நடந்தால், மீன் குழும்பு பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்தது போல் ஆகிவிடும்.

அரசியலில் இறங்குவதற்கு முன்னர் சில திட்டங்களைத் தீட்டினேன். முதலாவதாக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் 60,000 கட்சிப் பதவிகள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் அது தேவைப்படும். அதற்குப் பின்னர் அது தேவைப்படாது.

இதனால் எல்லா வழிகளிலும் டெண்டர் கொடுத்து ஊழல் நடத்துவார்கள். இது ஆட்சிக்கு, கட்சிக்கு, மக்களுக்கு ரொம்ப கெட்டது. கட்சிப் பதவியைப் பலரும் தொழிலாகவே வைத்துள்ளார்கள். அதனால், தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பதவிகளையும் ஆட்களையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டோம்.

இரண்டாவதாக, சட்டமன்றத்தில் 50, 60 வயதைத் தாண்டியவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.

ஆனால், என் கட்சியில் 50 வயதுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று திட்டம் போட்டோம். சுமார் 40 சதவிகித ஆட்கள் இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கிறேன். அதேபோல ஐ.ஏ.எஸ், நீதிபதிகள் உள்ளிட்ட அறிவார்ந்த நல்லவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்.

மூன்றாவது, மிக முக்கியமானது. தேசியக் கட்சிகளைத் தவிர நாட்டில் உள்ள மற்ற கட்சிகளில், ஆட்சிக்கும் கட்சிக்கும் ஒரே தலைவர்தான். மக்கள் இதை குறித்து கேள்வி கேட்க முடியாது. ஆக, கட்சிக்கு ஒரு தலைமை. ஆட்சிக்கு ஒரு தலைமை. கட்சி என்பது கொள்கைகள்தான். கட்சி வகுத்துத் தரும் கொள்கைகளை, வாக்குறுதிகளை ஆட்சியிலிருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

முதல்வராக இருப்பதில் எனக்கு எப்போதும் நாட்டம் இல்லை. எனக்கு எவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தும் முதல்வர் பதவியைத் தவிர்த்தவன் நான். கட்சித் தலைவனாக மட்டுமே தொடர்வேன்.

முதல்வராக இருப்பவர் நல்ல சிந்தனை கொண்டவராக, படிப்பு உள்ளவராக, அன்பு கொண்டவராக நாம் உட்கார வைப்போம். கட்சி என்பது எதிர்க்கட்சி போல. தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம். முதல்வர் அதிகாரத்தில் கட்சி தலையிடாது. இதுதான் என் திட்டம்.

இந்தத் திட்டத்தை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று எண்ணினேன். இது குறித்து நான் பலரிடம் பேசினேன். பலரிடம் கருத்துக் கேட்டேன். பலர் கட்சிப் பதவி இல்லை என்றால் யார் வருவார்கள் என்று கேட்டார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் மன்றத்தில் பலருக்குப் பிடிக்காது என்றார்கள். மூன்றாவது திட்டத்தை சில இளைஞர்களைத் தவிர யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த ஆலோசனைகளில் வந்த கருத்துகள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இதை மாவட்டச் செயலாளர் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் எனது அன்றைய வருத்தம். தலைவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதுதான் தொண்டர்கள். தொண்டர் சொல்வதைத் தலைமை ஏற்காது,” என்றார்.

.