This Article is From Feb 07, 2019

நெருங்கும் மக்களவைத் தேர்தல்; அரசியல் கட்சிகளை எச்சரிக்கும் வாட்ஸ்-அப்!

வாட்ஸ்-அப் செயலியை உலகம் முழுவதும் 150 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்

நெருங்கும் மக்களவைத் தேர்தல்; அரசியல் கட்சிகளை எச்சரிக்கும் வாட்ஸ்-அப்!

வாட்ஸ்-அப் செயலிக்கு இந்தியாவில்தான் அதிகபட்ச பயனர்கள் இருக்கின்றனர்.

ஹைலைட்ஸ்

  • 'அரசியல் கட்சிகள் வாட்ஸ்-அப்-ஐ தவறாக பயன்படுத்துகின்றன'
  • வாட்ஸ்-அப் மூலம் வதந்திகள் பரவுவது அதிகமாகியுள்ளது
  • இந்தியாவில் வாட்ஸ்-அப் செயலியை 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்
New Delhi:

‘மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வாட்ஸ்-அப் செயலியை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அப்படி செய்வது அவர்களுக்கு நல்லதல்ல' என்று வாட்ஸ்-அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வாக்காளர்களை கவரும் நோக்கில் வாட்ஸ்-அப் செயலியைப் பயன்படுத்தி, அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தவறான தகவல்கள் மற்றும் அவதூறு பிரசாரத்தில் ஈடுபடக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலைநில் எந்த அரசியல் கட்சிகள், வாட்ஸ்-அப் செயலியை தவறாக பயன்படுத்தி வருகிறது என்று சொல்லாமல் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது அந்நிறுவனம். 

வாட்ஸ்-அப் செயலியை, நாட்டின் இரண்டு பிரதான தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக-தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் மற்ற கட்சிகளை, ‘தவறான தகவலை பரப்புகிறார்கள்' என்று குற்றம் சாட்டியுள்ளன. அதே நேரத்தில் தாங்கள் அது போல நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என்றும் தெரிவிக்கன்றன.

இப்படிப்பட்ட சூழலில் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி கார்ல் வூக், ‘எங்கள் செயலியை சில அரசியல் கட்சிகள், தகவலை பறிமாறிக் கொள்ள அல்லாமல், அவதூறுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அப்படி தொடர்ந்து செய்து வந்தால், அவர்களுக்கான சேவை துண்டிக்கப்படும்' என்றுள்ளார். 

பிரேசிலில் கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடந்தபோதும், வாட்ஸ்-அப் மிகவும் தவறான வதந்திகளை பரப்ப பயன்படுத்தப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்துதான் இந்திய அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ்-அப் செயலிக்கு இந்தியாவில்தான் அதிகபட்ச பயனர்கள் இருக்கின்றனர். சுமார் 20 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். 

uqtlndj

 

கார்ல் தொடர்ந்து பேசும்போது, ‘வாட்ஸ்-அப் மூலம் பல தவறான விஷயங்கள் பரப்பப்பட்டு வருகிறது என்பதை நாங்கள் அறிவோம். அதை எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமோ சரி செய்து விடுவோம்' என்று விளக்கினார். 

பாஜக, ஐடி துறை செயலாள் அமித் மால்வியாவை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்கும்போது, ‘வாட்ஸ்-அப் நிறுவனம் எங்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. எனவே, எந்த வித கருத்தும் சொல்ல முடியாது' என்று முடித்துக் கொண்டார். 

காங்கிரஸ் கட்சியின் ஐடி செயலாளர் திவ்யா ஸ்பந்தனாவிடம் கேட்டபோது, ‘எங்கள் கட்சி வாட்ஸ்-அப் செயலியை தவறாக பயன்படுத்தாது' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

சென்ற ஆண்டு வாட்ஸ்-அப் மூலம் பரவிய வதந்தியால் பலர் இந்திய அளவில் கொல்லப்பட்டனர். இதையடுத்து வாட்ஸ்-அப், அரசாங்கத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. அரசின் எச்சரிக்கைக்குப் பின்னர் வாட்ஸ்-அப், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 

வாட்ஸ்-அப் செயலியை உலகம் முழுவதும் 150 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் தவறான நடவடிக்கையில் ஈடுபடும் 20 லட்சம் பயனர்களை அவர்கள் தடை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற கேள்விக்கு வாட்ஸ்-அப் நிறுவனம் பதில் சொல்லவில்லை. 

.