This Article is From May 04, 2019

மோடி, அமித்ஷா மீதான புகார்களை முடித்த தேர்தல் ஆணையம்; எதிர்ப்பு தெரிவித்த அதிகாரி!?

தேர்தல் ஆணையத்திடம் இந்த விவகாரம் குறித்து கேட்டறிய தொடர்பு கொண்டோம். அவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர்

அமித்ஷா மேற்கு வங்கத்தில் பேசும்போது, ‘புதிய இந்தியா, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது’ என்று உரையாற்றினார். 

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டனர் என்று எதிர்கட்சிகள் புகார்களை அளித்திருந்தன. மோடி மற்றும் அமித்ஷா மீது கொடுக்கப்பட்ட 5 புகார்களில் எவ்வித விதிமீறல்கலும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு தேர்தல் ஆணையத்திலேயே எதிர்ப்பு இருந்ததாக தற்போது NDTV-க்குத் தகவல் கிடைத்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் ஒருவர் NDTV-யிடம் பேசினார். 5 வழக்குகளில், பொறுப்பில் இருக்கும் மூன்றில் ஒரு கமிஷனர், மோடி மற்றும் அமித்ஷாவை புகாரிலிருந்து விடுவிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார் எனக் கூறியுள்ளார். 

தேர்தல் ஆணையத்தின், இந்த மூவர் குழுவில், தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா மற்றும் கமிஷனர்கள் அஷோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் உள்ளனர். 

தேர்தல் விதிமுறை புகார்கள் குறித்து இந்த மூவர் குழுதான் முடிவெடுக்கும். புகார்கள் குறித்து இந்த மூவர் குழு ஒரு மனதாக முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. அப்படி இல்லாத பட்சத்தில் பெரும்பான்மை முடிவே இறுதியானது. 

பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக பிரசாரம் செய்யும்போது, ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்காக உங்கள் வாக்கினை போடுங்கள்' என்றார். அதோபோல ராஜஸ்தானில் பேசும்போது மோடி, ‘இந்திய அணு ஆயுதங்கள் தீபாவளிக்காக வைக்கப்பட்டிருக்கவில்லை' என்றார்.

அமித்ஷா மேற்கு வங்கத்தில் பேசும்போது, ‘புதிய இந்தியா, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது' என்று உரையாற்றினார். 

இப்படி இருவரும் பல இடங்களில் பரப்புரை செய்தபோது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தன. 

ஆனால், இதுவரை மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்திற்குள் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு இருந்தது தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் கசிந்துள்ளதை அடுத்து, ப.சிதம்பரம் பல ட்வீட்டுகள் மூலம் கருத்திட்டுள்ளார். 


 

தேர்தல் ஆணையத்திடம் இந்த விவகாரம் குறித்து கேட்டறிய தொடர்பு கொண்டோம். அவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர்

.