This Article is From Mar 12, 2019

பொள்ளாச்சி கொடூர சம்பவம்: உள்ளத்தை உறைய வைக்கிறது! - வைகோ வேதனை

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் உள்ளத்தை உறைய வைக்கிறது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்ப முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இந்த இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

இதில் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்றிராத, நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவங்கள், பொள்ளாச்சி பகுதியில் அரங்கேறி இருக்கின்றன.

Advertisement

பள்ளி, கல்லூரி மாணவிகளை, வேலைக்குச் செல்லும் இளம் பெண்களை நேரிலும் முகநூலிலும் பழகி நட்பாக நடித்து, காதல் வலையில் ஏமாற்றி வீழ்த்தி, சின்னப்பாளையம் பண்ணை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களைக் கதறக் கதற நாசமாக்கிய மிருக வெறி பிடித்த காமுகர் கூட்டத்தின் அக்கிரமச் செயல்கள், காணொளிகளாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. இந்தப் பயங்கரச் செய்தி, உள்ளத்தை உறைய வைக்கின்றது.

அந்தக் காட்சிகளைக் காண முடியாது. அந்தப் பெண்களின் அலறல் குரலைக் காது கொடுத்துக் கேட்டால், நெஞ்சு வெடித்துவிடும் போல் உள்ளது. நூற்றுக்கணக்கான இளம்பெண்கள், சிறுமிகளை இந்தக் கும்பல் சீரழித்திருக்கலாம் எனத் தெரிகின்றது. இப்பெண்களும், அக்குடும்பத்தினரும், நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று பதறுகின்றார்கள். அவர்கள் இதுவரை வாழ்ந்த வந்த பகுதியில் இனி எப்படி அவர்கள் தலைநிமிர்ந்து நடக்க முடியும்? ஐயோ, நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.

Advertisement

மிருகங்களை விடக் கொடிய இப்பாவிகளைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும். அதேவேளையில், பாதிக்கப்பட்ட பெண்களை, வெளிப்படையான விசாரணைக்கு ஆளாக்காமல், அவர்களுக்குப் பெரும் தலைக்குனிவு ஏற்படாத வகையில், மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரணை நடைபெற வேண்டும்.

இந்த நாசக்காரர்களைப் பாதுகாக்க, ஆளுங்கட்சியின் கரங்கள் நீளுகின்றன என்ற செய்தி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது. இந்த இழி செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள், அவர்களைப் பாதுகாக்க முனைந்தவர்கள், நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் அனைவரும், சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட வேண்டும்; கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

Advertisement

தக்க நடவடிக்கையை அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாவிடில், அரசியல் கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்கள், பெண் உரிமை இயக்கங்களும் கிளர்ந்து எழுவார்கள். குற்றவாளிகள் தப்ப முடியாது என எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

Advertisement

மேலும் படிக்க :  பொள்ளாச்சி விவகாரம்: ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று! - தமிழிசை வேதனை

Advertisement