Pollachi Rape Case - குண்டர் சட்டத்தை எப்படி பதிவு செய்வது என்பது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்கும் பட்சத்தில்...
Pollachi Rape Case - பொள்ளாச்சி (Pollachi) பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை (Goondas Act) ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்ட நடைமுறைகளை காவல் துறை தரப்பு சரிவர கடைபிடிக்கவில்லை என்பதை காரணமாக சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் பல நூறு இளம் பெண்களை, பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு கும்பல் ஏமாற்றி, பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் கொடுத்தது குறித்து தெரியவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த சம்பவம் தொடர்பாக சில வீடியோக்கள் வெளியாகி, பார்ப்போரை பதற்றமடையச் செய்தன. இது சம்பந்தமாக திருநாவுக்கரசு, வசந்தகுமார், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்தினர், குண்டர் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில், பிணை கொடுக்க முடியாத நடைமுறை இருக்கிறது. ஆனால், தற்போது பாலியல் குற்றச்சாட்டு மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இருப்பதால், அவர்களுக்குப் பிணை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. குண்டர் சட்டத்தை எப்படி பதிவு செய்வது என்பது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்கும் பட்சத்தில், தமிழக அரசு தரப்பு இதில் மெத்தனமாக இருந்தது பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆளுங்கட்சியின் பின்புலம் கொண்டவர்கள் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்லப்பட்டு வருவது பிரச்னையை மேலும் பெரிதாக்கியுள்ளது.
தற்போது இந்த பாலியல் வழக்கை, சிபிஐ விசாரணை அமைப்பு, விசாரித்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் விசாரணையில் வந்து கொண்டிருக்கும் நிலையில், வழக்கில் பெரும் பின்னடைவாக குண்டர் சட்ட ரத்து உத்தரவு வந்துள்ளது.
இது குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர், மு.க.ஸ்டாலின், “அதிமுக அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும், தமிழகத்தையே அதிர்ச்சிக்கும் அருவருப்புக்கும் உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் மீதான குண்டர் சட்டம் ரத்தாகியிருக்கிறது.
இளம் பெண்களில் வாழ்வினை, இரக்கமனம் சிறிதுமின்றிச் சூறையாடிய இந்த இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, சாதாரணமாகக் கடைபிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகளைக் கூட அதிமுக அரசின் மறைமுகக் கட்டளைப்படி, காவல் துறை அதிகாரிகள் கடைப்பிடிக்காமல் கைவிட்டிருப்பது வேதனை தருகிறது.
‘ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்' என்ற அடிப்படை சட்ட நடைமுறையைக் கூட, வேண்டுமென்றே திட்டமிட்டு காவல்துறை, யாருக்கோ உதவும் நோக்கில் கோட்டை விட்டுள்ளது.
பழமொழியைப் போல தமிழக மக்களிடையே பழக்கப்பட்டுப் போன, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இது போன்ற சூழலை ஏன் அதிமுக அரசு திட்டமிட்டு உருவாக்குகிறது? யாரைக் காப்பாற்ற இந்த முயற்சிகள் நடக்கின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விகளுக்குள் மறைந்திருக்கும் விடையும் பொது மக்களுக்குப் புரிகிறது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை, முறைப்படியும், அதிகார வர்க்கத்தின் அழுத்தத்திற்கு ஆட்படாமலும் நடத்தப்பட்டு, இளம் பெண்களின் எதிர்காலத்தைச் சீரழித்த, கழிசடைக் கலாசாரக் கயவர்கள் அனைவரும், சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்,” என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
ஆனால் தமிழக அரசு தரப்போ, “பொள்ளாச்சி வழக்கில், குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்கள். தற்போது, நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதில் கேள்வி கேட்க வேண்டியது நீதிமன்றத்தைத்தான். நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காக்க வேண்டும் என்கிற அவசியம் துளியும் இல்லை,” என்று விளக்கம் கொடுக்கிறது.