பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
Coimbatore, Tamil Nadu: பொள்ளாச்சி கொடூர பாலியல் வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. குற்றவாளிகளை பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் குரல் வளையை நசுக்குவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது. இருப்பினும், இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்த ஒரேயொரு பெண் மட்டுமே இதுவரை புகார் அளித்திருக்கிறார்.
மற்ற எவரும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிப்பதற்கும் முன் வரவில்லை. முன்னதாக, கோவை மாவட்ட எஸ்.பி. புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்டார். இதேபோன்று சிபிஐக்கு வழக்கை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இடம்பெற்றிருந்தது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் எவரும் புகார் அளிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி ஒருவர் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், ‘பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வெளியிட்டால் யார்தான் வந்து புகார் அளிப்பார்கள்' என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பொள்ளாச்சியில் இந்த விவகாரத்தை கண்டித்தும், நீதிமன்றம் இந்த வழக்கை மேற்பார்வையிட வலியுறுத்தியும் வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாலாஜி என்பவர் கூறுகையில், ‘நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ இந்த வழக்கை விசாரித்தால் நன்றாக இருக்கும்' என்றார்.
காமராஜ் என்பவர் கூறும்போது, ‘பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கும் என்று கருதுகிறேன். விசாரணை கோரப்பட்டும் சிபிஐ இன்னும் ஏன் விசாரிக்க வரவில்லை?' என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் இன்றளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.