This Article is From Mar 15, 2019

‘எப்படி பெண்களை சிக்க வைத்தோம்..!’- பொள்ளாச்சி கொடூரம் பற்றி வீடியோ வாக்குமூலம்

இந்த விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Chennai:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, தமிழகத்தைத் தாண்டியும் அதிர்வலைகளை எழுப்பி வரும் நிலையில், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இரு நபர்கள் பேசியதாக வெளியான வீடியோ ஒன்று பரபரப்பை கிளப்பி வருகிறது. வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசு என்கிற இரண்டு பேரும் பெண்களை, எப்படி தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தார்கள் என்பது குறித்து விளக்கியுள்ளனர். வீடியோவின் உண்மைதன்மை குறித்து NDTV-யால் உறுதி செய்யப்பட முடியவில்லை. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலால் 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறை வழக்கை விசாரித்து வந்த நிலையில், கடந்த செவ்வாயன்று இந்த பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இப்படிப்பட்ட சூழலில்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசு குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 

3:25 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், சபரிராஜன் போல் இருப்பவர் முதலில் பேசுகையில், ‘நான் கூப்பிட்ட உடன் என் காரில் அந்த பெண் ஏறிக் கொண்டார். அதன் பிறகு நான் செய்தது தவறுதான். நான் முதலில் அந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தேன். பின்னர், நான் அவருடைய ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்த உடன், வேண்டாம் என்று சொன்னார். ஆனால் நான் தொடர்ந்து அவிழ்த்துக் கொண்டே, ‘முத்தத்துக்கு மட்டும் எதுவும் சொல்லாமல், இதற்கு மட்டும் தடை போடுவது எப்படி' எனக் கேட்டேன்' என்றார்.

அவர் தொடர்ந்து, திருநாவுக்கரசு போல் இருப்பவரை கை காட்டி, ‘இவர்தான் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு போன் செய்து மிரட்டுவார். வீடியோவை வெளியே விட்டுவிடுவேன் என சொல்லி அச்சுறுத்துவார்' என்கிறார். இருவரையும் போலீஸ் பிடியில் ஒப்படைக்கும் முன்னர் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. வீடியோ எடுத்தவர்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் பேசுவதை வைத்துப் பார்த்தால், நண்பர்கள் மற்றும் உறவினர்களாக இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

இந்த சம்பவம் பற்றி அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி வரும் இந்த வழக்கு குறித்து போலீஸ் தரப்பு, ‘இந்த கும்பலிடம் அதிகம் சிக்கியது கல்லூரி செல்லும் பெண்கள்தான். முதலில் சமூக வலைதளங்கள் மூலம் ஒரு பெண்ணை குறிவைத்து இந்த கும்பல் பேச ஆரம்பிக்கிறது. அவர்களின் நம்பிக்கையை வென்ற பிறகு, வெளியே சாப்பிடக் கூப்பிடுவது அல்லது வெகு தூரம் பயணத்துக்குக் கூப்பிடுவதைச் செய்கின்றனர். அப்படி வரும் பெண்களைத்தான் இந்த கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது' என்று விளக்குகிறது. 

சபரிராஜன்தான், வளையில் பெண்களை விழ வைப்பது மற்றும் வீடியோ எடுப்பதை செய்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் இதுவரை வெளியிடப்பட்ட இரண்டு செய்திக் குறிப்புகளில் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் இதர விவரங்களை வெளியிடப்பட்டுள்ளன. அரசின் இந்த அலட்சியத்தை எதிர்கட்சியினர் கண்டித்துள்ளனர். ‘பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து புகார் கொடுக்கக் கூடாது என்று மறைமுகமாக அரசு விடுக்கும் எச்சரிக்கையாகவே இதைப் பார்க்க முடியும்' என்று இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசை சாடியுள்ளார். இந்த விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

 

மேலும் படிக்கபொள்ளாச்சி விவகாரம்: திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் மனுத்தாக்கல்!
 

.