This Article is From Mar 29, 2019

பொள்ளாச்சி வழக்கு: இன்னும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? உயர்நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலால் 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து, இந்த பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடி விசாரணையிலிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால் இதுவரை சிபிஐ இந்த வழக்கை ஏற்கவில்லை.

Advertisement

இதனிடையே, பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கிரன் இணையதளத்தில் வெளியான `வீடியோ செய்தி' பற்றிய விளக்கம் தேவைப்படுகிறது. எனவே, வரும் மார்ச் 30க்குள் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில், விசாரணை அதிகாரி எஸ்.பி. நிஷா பார்த்திபன் முன்னிலையில் நக்கீனர் கோபால் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என சபிசிஐடி போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

இதனை எதிர்த்து நக்கீரன் கோபால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? விசாரணை எப்போது சிபிஐக்கு மாற்றப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Advertisement

இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், வழக்கின் தற்போதைய நிலை குறித்து கூறியதுடன், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டதாக கூறினார். இதையடுத்து, நக்கீரன் கோபால் நாளைக்குப் பதில் ஏப்ரல் 1-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக அனுமதி அளித்தனர்.

Advertisement