தவறான கருத்துகள் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய பாஜக அரசை எதிர்க்கிறாரா?
கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் இருந்த போது பேட்டி கொடுப்பதை தவிர வேறு என்ன செய்தார்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடாரமாகத் தமிழகம் மாறிவிட்டதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
தற்போது கேரளா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது, இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இன்று இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார். அவருக்கு அவரது கட்சி தலைவர் பதவி கொடுக்குமா கொடுக்காதா என்பதை அவரது கட்சியை தான் கேட்க வேண்டும். அவருக்கு தலைவர் பதவி கிடைக்குமா, கிடைக்காதா என நான் ஜோசியம் சொல்ல போவதில்லை. ஆனால், அவர் எங்கோ இருக்கும் கோபத்தை எங்கள் மீது காட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
சட்டம்-ஒழுங்கு உட்பட பல்வேறு துறைகளில், தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக மத்திய அரசு விருதுகள் அளித்து வரும் நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனின் புகார் ஏற்புடையது அல்ல. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் தமிழ்நாட்டை, மாநில அரசு நிர்வாகத்தை பாராட்டும் நிலையில், தவறான கருத்துகள் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய பாஜக அரசை எதிர்க்கிறாரா? என கேள்வி எழுப்பினார்.
5 வருடங்களாக மத்திய அமைச்சராக இருந்து எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், ஒரு திட்டத்தை கூட அவரால் கொண்டு வர முடியவில்லை. டெல்லியில் இருந்து வருவது விமான நிலையத்தில் பேட்டி அளிப்பது, பின்னர் இங்கிருந்து செல்வது, பேட்டி கொடுப்பது என்று இதை மட்டுமே செய்து வந்தார். அதனால், இதனை ஒரு விரக்தியின் வடிவமாக தான் பார்க்க முடியும்.
அவரது கருத்தை நாங்கள் மத்திய அரசின் கருத்தாகவோ, பாஜகவின் கருத்தாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. அவரது கருத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.