புதுச்சேரி: (பிடிஐ) கடந்த ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி முதல் இருந்து கேரளாவில் கனமழை பெய்து வந்ததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான பணிகளில் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு பல்வேறு அமைப்பினரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். கேரள வெள்ள நிவாரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 700 கோடி அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், வெளிநாடுகளின் நிதி உதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாரயணசாமி, கேரளவிற்கு கிடைக்க இருக்கும் நிதி உதவிகளுக்கு தடையாய் இருப்பதில் இருந்து மத்திய அரசு விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, இந்தியா சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கேரளாவிற்கு வரும் வெளிநாட்டு நிதிகளை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் சார்பில், 10 கோடி ரூபாயை கேரளா மாநில முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாகவும் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
எனினும், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 700 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)