Pongal Festival: சுமார் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Pongal Festival: தமிழர்களின் பாரம்பரியத்தை உலகிற்கு தெரியப்படுத்தும் ஜல்லிக்கட்டுப் (Jallikattu) போட்டிகள் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறுவது வழக்கம். இன்று மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் தமிழக அரசின் நடத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை, பெரும் வீரங்கொண்டு அடக்கி வருகிறார்கள் காளையர்கள்.
காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் உறுதிமொழியுடன் போட்டிகள் ஆரம்பமாகின. ஜல்லிக்கட்டுத் தொடர்பான பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதியான மாணிக்கம் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை காவல் துறை ஆணையர் தேவ ஆசீர்வாதம், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் தலைமையிலான ஜல்லிக்கட்டு கமிட்டியின் வழிகாட்டுதல்படியே போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்றைய ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்க, அதை அடக்க 730 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மணி நேரமும் ஒரு சுற்றுப் போட்டி நடைபெறும். ஒரு சுற்றில் சுமார் 75 மாடுபிடி வீரர்கள் மட்டுமே காளைகளை அடக்க அனுமதிக்கப்படுவார்கள். அதிக மாடுகளைப் பிடித்த வீரர்கள், அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் காயமடைவோருக்கு சிகிச்சை கொடுக்க 5 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. மேலும் மாடுபிடி வீரர்களுக்கென்று 10-க்கும் அதிகமான ஆம்புலன்ஸுகளும், மாடுகளுக்கென்று 2 ஆம்புலன்ஸுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
போட்டியின் போது அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க 1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.