அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது, காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ஒட்டுமொத்த தமிழகமே திரண்டு போராடி 2017-ல் மீட்டெடுத்தது. இந்தாண்டு போட்டியையொட்டி கடந்த சில மாதங்களாக காளைகளும், இளைஞர்களும் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று உலக புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனைக் காண சுற்று வட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் கண்டு ரசிக்கின்றனர். அவர்களுக்காக சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாடுகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. விதிகளை மீறும் வீரர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
மொத்தம் 700 காளைகள் போட்டியில் பங்கெடுத்துள்ளன. அவற்றை அடக்க 900 வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட காவல்துறை சிறப்பாக செய்துள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை கவனிக்கின்றனர்.
மாடுகளை அடக்கும் வீரர்களுக்கு, இரு சக்கர வாகனங்கள், பாத்திரங்கள், கட்டில், சேர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சிறப்பு பரிசாக 2 கார்கள் வழங்கப்படவுள்ளன.