உங்க போன எடுங்க... வாட்ஸ் அப், ஃபேஸ்புக் இதுல எல்லாம் எத்தன பொங்கல் வாழ்த்து செய்தி வந்திருக்குன்னு பாருங்க... சிலர் பொங்கல் பொங்குற மாதிரி அனிமேட்டட் வீடியோக்கள், பொங்கல் ஸ்டிக்கர் மெஸேஜ்னு ஆரம்பிச்சு ஜல்லிக்கட்டு கேம் ஆன்ட்ராய்டுல விளையாடுற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கு. ஆனா அப்படியே ஒரு 10, 15 வருஷம் பின்னாடி போனா, இந்த உலகின் வரமளிக்கப்பட்டவர்கள்னு சொல்லப்படுற 90ஸ் கிட்ஸோட பொங்கல் எப்படி இருந்திருக்கும்னு பார்ப்போமா?
பொங்கல் வாழ்த்து அட்டை!
25 பைசாவில் ஆரம்பித்து 5 ரூபாய், 10 ரூபாய் வரை நீளும் இந்தப் பொங்கல் வாழ்த்து அட்டைகள், பள்ளிக்கூடத்தில் பக்கத்தில் இருக்கும் நண்பனுக்கு என்ன பொங்கல் வாழ்த்து அட்டை தருவது, உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் விதவிதமாய் கார்டுகள் வாங்கி தருவதில் உள்ள சந்தோஷத்தை இன்றைய வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளால் தர முடியுமா என்பது சந்தேகமே. ஒருவருக்கு எத்தனை வாழ்த்து அட்டைகள் வந்தன என்பது எண்ணிப்பார்ப்பதில் உள்ள சந்தோஷம் இன்று வரும் 500 மெசேஜ்களில் இருக்காது என்பதே உண்மை.
பொங்கல் படம்!
எல்லா பொங்கலுக்கும் திரைப்படம் வெளியாகத்தான் செய்கின்றன. ஆனால் அப்போது பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் பொங்கல் பற்றிய ஒரு காட்சியோ அல்லது படமே பொங்கலை மையப்படுத்தியோ இருக்கும். ரஜினியின் முரட்டுக்காளை வந்த பிறகு ஊரே ‘அண்ணனுக்கே ஜே! காளையனுக்கு ஜே!' எனக் கொண்டாடி மகிழ்ந்தது. பொங்கலுக்கு வெளியான கமலின் ‘மகாநதி' படத்தில் வரும் ‘பொங்கலோ பொங்கல்' இன்று வரை பொங்கலின் ட்ரேட் மார்க் பாடல். விஜய்க்கு ‘போக்கிரி' பொங்கல் என்றால் அஜித்துக்கு ‘வீரம்' பொங்கல் என தல-தளபதி ரசிகர்களின் திருவிழாக்காலம் பொங்கல். முன்னணி நடிகர்கள் பலரும் பொங்கலைத் தான் தங்களது பெரிய படங்களுக்கான ரிலீஸ் தேதியாக வைத்திருந்தார்கள். அன்று முரட்டுக்காளை ரஜினிதான் இன்று பொங்கலுக்கு பேட்ட பராக்கும் சொல்ல வைக்கிறார். 90ஸ் கிட்ஸ்களுக்கு பொங்கல் ப்ளாக்பஸ்டர் படங்களாகவே நிறைந்திருக்கும்.
போட்டிக் கரும்பு!
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தீபாவளியன்று எவ்வளவு பேப்பர் கிடக்கிறது அவ்வளவு வெடி வெடித்தோம் என்று சந்தோஷப்பட்ட அதே தலைமுறைதான், பொங்கலுக்கு எவ்வளவு கரும்பு தின்று சக்கையாக்கினோம் என்று கணக்குப் பார்க்கும். ‘ஒரு கட்டு கரும்ப ஒரே ஆளா தின்னவங்கெடா நாங்க' என பன்ச் பேசுமளவுக்கு போட்டியே நடக்கும். இன்றைக்கும் கரும்பு இருக்கிறது. ஆனால் ஒரு முழு சாப்பாட்டில் சம்பரதாயத்துக்கு ஸ்வீட் வைக்கும் அளவுக்கு வைத்து கொண்டாடுகிறார்கள். இந்த 2000 கிட்ஸ் இடம் கரும்பு என்றால் என்னவென்று கேட்டால், ‘பாட்டில விக்குற சுகர் கேன் ஜூஸ்தானே' என தலை சுற்ற வைக்கிறார்கள். வெட்டி எரியாத வேர் கரும்பு நல்லா இருக்குமென்று உறுதியான பல்லோட சாப்பிட்ட கடைசி தலைமுறை 90ஸ் கிட்ஸ்தான்.
கலர் கோலங்களின் க்ராண்ட் ஃபைனல்!
மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் கலர் கோலம் போட்டு டையர்டு ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு இனி அடுத்த வருஷம் மார்கழியில்தான் கலர் கோலம் போடுவோம் என்று சொல்வதற்கு முன்னால் ‘கடைசியா ஒரு பெரிய கோலம் போட்டுடுவோம்னு' ஃபைனல் மேட்ச் ஆட கிடைத்த வாய்ப்பாகவே பெரிய கலர் கோலங்கள் போடுவதே தனி அழகு. மாட்டுப் பொங்கல் அன்றைக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மாடு எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கே ஒரு கூட்டம் ஊரைச் சுற்றி வரும்.
ஜல்லிக்கட்டு!
வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு ஊர் பக்கம் எல்லாம் ரொம்பவே ஃபேமஸ். ஜல்லிக்கட்டு நடப்பதைப் பார்ப்பதை விட மாடுகளை தயார் செய்வது, போட்டியில் தப்பிய மாடு ஊருக்குள் ஓடி வந்து அதை பிடிப்பது மெர்சலான அனுபவமாக இருக்கும். மதுரை, மணப்பாறை, புதுக்கோட்டை ஜல்லிக்கட்டுக்கு வெளிநாட்டினர் வருவதெல்லாம் வேற லெவல்.
பொங்கலோ பொங்கல்!
வீட்டுல பொங்கல் வைக்கும் போது கரெக்டா பொங்கல் பொங்குற நேரத்துல பாக்கணும், அதுவும் பொங்கல் கிழக்கு பக்கமா பொங்கணும், பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்…' சொல்லணும்னு கொண்டாட்டம் வீட்டு சமையலறையில இருந்தே ஆரம்பிக்கும். இன்னிக்கு பொங்கல் பொங்குறத பூமராங் பண்ணி இன்ஸ்டாகிராம்ல படம் பிடிச்சு வைக்கிறோம். அன்னிக்கு இதெல்லாம் இதயத்துல இடம் பிடிச்சு வைச்சிருந்த நினைவுகளா இருந்தது.
பொங்கலுக்கு தூர்தர்ஷன் சேனல்ல பரிசு கேள்விலாம் கேப்பாங்க… அப்போ சரியான பதில் தெரிஞ்சும் லைன் கிடைக்காம அதெல்லாம் எனக்கு கிடைச்சிருக்க வேண்டிய பரிசு லைன் கிடைக்கலனு சொல்லிட்டு போகும் தலைமுறையும் இந்த 90ஸ் கிட்ஸ்தான். பல பேரோட பொங்கல் ட்ரஸ்ல பெரிதும் இடம் பிடிச்ச சக்திமான் ட்ரெஸ், கரும்ப விக்கோ வஜ்ரதந்தி விளம்பரத்துல வர்ற மாதிரி கடிக்கறதுனு நாஸ்டாலஜியாக்களோட கெத்தா நடந்து வரும் இந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு நாஸ்டாலஜியா பொங்கல் வாழ்த்துகள்!