This Article is From Nov 30, 2018

பொன்.மாணிக்கவேல் தொடர்வது இன்ப அதிர்ச்சி: வைகோ

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராகத் பொன்.மாணிக்கவேல் தொடர்வது இன்ப அதிர்ச்சி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பொன்.மாணிக்கவேல் தொடர்வது இன்ப அதிர்ச்சி: வைகோ

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, பொன்.மாணிக்கவேல் பதவி காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2012-ம் ஆண்டு, காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவரது கடுமையான முயற்சியால் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 1146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 17 சிலைகளை பன்னாட்டுக் காவல்துறை உதவியுடன் தமிழகத்துக்கு மீட்டுக் கொண்டுவந்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் 45 வழக்குகளைப் பதிவு செய்து, 47 குற்றவாளிகளை பொன் மாணிக்கவேல் கைது செய்துள்ளார். புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் 50 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ராஜராஜ சோழன், செம்பியன்மாதேவி சிலைகளை மீட்டுக் கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு. கலைப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி, சிலைக்கடத்தலில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளைக் கைது செய்தார்.

சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு தமிழக அரசு மாற்றியதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு ரத்து செய்து, பொன் மாணிக்கவேலே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராக தொடர்ந்து பணியாற்றுவார் என ஆணை பிறப்பித்தது.

இந்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற ஆணையை அங்கீகரித்தது. இந்தச் சூழ்நிலையில், இன்று 30.11.2018 ஆம் நாள் அன்று ஐஜி பொன் மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுகிறார் என்பதால், நேற்று காவல்துறையினர் பிரிவு உபச்சார பாராட்டு விழா நடத்தினர். அதில் அனைவர் மனதையும் நெகிழச் செய்யும் வகையில் பொன் மாணிக்கவேல் நன்றியுரை ஆற்றினார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக காவல்துறை அதிகாரி அபாய் குமார் சிங்கை தமிழக அரசு நியமித்தது.

திடுக்கிடும் திருப்பமாக, இன்ப அதிர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் மகாதேவன், நீதியரசர் ஆதிகேசவலு அமர்வு தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து பொன் மாணிக்கவேல் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு ஆணை பிறப்பித்துள்ளது.

இது வரவேற்கத்தக்க மகிழ்ச்சியூட்டும் நடவடிக்கையாகும். கடந்த முறை உச்சநீதிமன்றத்துக்குச் சென்று மூக்கறுபட்டதை நினைவில் வைத்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்று எண்ணுகிறேன் என தெரிவித்துள்ளார்.

.