This Article is From Oct 22, 2019

’தேசத்தின் மகன் மகாத்மா காந்தி’; பிரக்யாவின் சர்ச்சை கருத்து! - காங்., கடும் கண்டனம்!

காந்தி இந்த தேசத்தின் மகன். அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன் என பிரக்யா கூறியுள்ளார்.

’தேசத்தின் மகன் மகாத்மா காந்தி’; பிரக்யாவின் சர்ச்சை கருத்து! - காங்., கடும் கண்டனம்!

சர்ச்சையான கருத்துகளை கூறுவதில் பிரபலமானவர் பிரக்யா சிங்

Bhopal:

சர்ச்சையான கருத்துகளை கூறுவதில் பிரபலமான பாஜக எம்.பி. பிரக்யாசிங் தற்போது, தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி என்பதற்கு பதிலாக 'தேசத்தின் மகன் மகாத்மா காந்தி'என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக மத்தியபிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களை சந்தித்த பிரக்யா கூறும்போது, 'காந்தி இந்த தேசத்தின் மகன். அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். இந்த தேசத்துக்காக யாரெல்லாம் பாடுபட்டார்களோ அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். 

‘தேசத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியை ‘தேசத்தின் மகன்' என்று பிரக்யாசிங் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது கருத்து சுதந்திர போராட்ட இயக்கத்தின் மாபெரும் தலைவரை அவமதிப்பதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி கூறும்போது, இது பாஜகவினரின் பாசாங்குத்தனத்தைக் காட்டுகிறது. ஒருபுறம், அவர்கள் மகாத்மா காந்தி மீது மரியாதை காட்டுவதாகக் கூறி ஊர்வலங்களை நடத்துகிறார்கள், மறுபுறம், அவர்களின் எம்.பி. அவரை அவமதிக்கிறார், என்று சாடினார்.

பாஜக எம்.பி., பிரக்யாசிங் தாகூர் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறுவதில் பிரபலமானவர். ஏற்கனவே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை தேசபக்தர் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். கடந்த மக்களவை தேர்தலின் போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கியதால் பிரக்யாசிங் தாகூருக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரக்யா தாகூரை போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக தேர்வு செய்ததற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பிரதமர் மோடி அவர் தேர்தலில் போட்டியிட ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

.