முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதியானது! (File)
New Delhi: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்துக்கும் மேல் கடந்துள்ள நிலையில், கடந்த 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, வேறு சில காரணங்களுக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த போது, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும், கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அவர் விரைவில் குணமடைந்து திரும்பி வர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் அஜய் மாகேன் தனது ட்விட்டர் பதிவில், நீங்கள் விரைவாக மீண்டு வரவும், நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.