This Article is From Aug 20, 2020

பிரசாந்த் பூஷனின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள நீதிமன்றம் 2 நாட்கள் அவகாசம்!!

பூஷனின் ட்வீட்களை வெளியிட்டதற்காக டிவிட்டரும் அவமதிப்பு வழக்கில் சிக்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து டிவிட்டர் நீதிமன்றத்திற்கு அளித்த விளக்கத்தினை ஏற்று, நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து டிவிட்டரை விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் குற்றவாளி என நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது

ஹைலைட்ஸ்

  • வழக்கறிஞர் பூஷன் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
  • தண்டனை விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை
  • தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன்; பூஷன்
New Delhi:

சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே மற்றும், உச்ச நீதிமன்றத்தின் கடந்த கால நடவடிக்கைகளையும் விமர்சித்து சமூக ஆர்வலரும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் டிவிட்டரில் தனது கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. விசாரணை முடிந்த நிலையில், வழக்கறிஞர் பூஷன் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

கடந்த வாரம் பூஷன் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், தண்டனை விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை. இன்று தண்டனை குறித்து விசாரணையை நீதிமன்றம் மேற்கொள்கின்றது. இந்நிலையில், தண்டனை குறித்தான நீதிமன்ற விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென பூஷன் கோரியிருக்கிறார். முன்னதாக “நீதிமன்ற அவமதிப்புக்கு நான் குற்றவாளி என்று கேள்விப்படுவதைக் கண்டு நான் வேதனை அடைகிறேன். தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஜனநாயகம் மற்றும் அதன் மதிப்புகளைப் பாதுகாக்க ஒரு வெளிப்படையான விமர்சனம் அவசியம் என்று நான் நம்புகிறேன்.” என பூஷன் கூறியிருந்தார்.

மேலும், தனது டிவிட் குறித்து தான் வருந்தவில்லையென்றும், இதனால் தான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர போவதில்லையென்றும், அதேபோல தான் நீதிமன்றத்திடம் கருணையை கோரவில்லையென்றும் பூஷன் வழக்கு விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பூஷனின் கருத்துகளை அவர் மறுபரிசீலனை செய்துக்கொள்ள அவருக்கு இரண்டு நாட்கள் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. “பூமியில் எந்த ஒரு நபரும் தவறு செய்யாமல் இருந்துவிட முடியாது. நீங்கள் நூற்றுக்கணக்கான நல்ல காரியங்களைச் செய்யலாம், ஆனால், அவை 10 குற்றங்களை செய்வதற்கான உரிமத்தினை உங்களுக்கு கொடுத்துவிடாது. இந்த வழக்கில் மனுதாரருக்கு வருத்தம் இருக்க வேண்டுமென நாங்கள் நினைக்கின்றோம்.” என வழக்கு விசாரணையின்போது நீதிபதி அருண் மிஸ்ரா குறிப்பிட்டு இரு நாட்கள் பூஷனுக்கு அவகாசம் அளித்துள்ளார்.

மேலும், எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உள்ளது என்றும், நல்ல நோக்கங்களுக்காக வழக்குகள் தொடுக்கப்படுவதை தாங்கள் வரவேற்பதாகவும், ஆனால், இது ஒரு தீவிரமான விசயம் என்றும், 24 ஆண்டுகால நீதிபதி வாழ்க்கையில் தான் யாரையும் அவமதித்ததில்லை என்றும் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, பேச்சு சுதந்திரம் என்பது எனக்கு, அல்லது ஊடகத்திற்கு என அனைவருக்கும் முழுமையானது அல்ல என்றும், அதற்கான வரையறைகள் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தண்டனை விசாரணை குறித்து பூஷனின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், பூஷனுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் முடியும் வரையில் தண்டனை என்ன என்பது முடிவு செய்யப்படாது என நீதிபதி உறுதி தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பூஷன் டிவிட்டரில் தெரிவித்த இரண்டு கருத்துக்களில், தலைமை நீதிபதி போப்டே சம்பந்தப்பட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், “கடந்த ஆறு ஆண்டுகளில் தேசத்தின் ஜனநாயகத்தை அழிப்பதில் நாட்டின் முந்தைய நான்கு தலைமை நீதிபதிகள் பங்கு வகித்தனர்” என்கிற அவரது இரண்டாவது கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.

பூஷன் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவின் மீதான் விசாரணை முடிந்த பின்னரே தண்டனை குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

பூஷனின் ட்வீட்களை வெளியிட்டதற்காக டிவிட்டரும் அவமதிப்பு வழக்கில் சிக்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து டிவிட்டர் நீதிமன்றத்திற்கு அளித்த விளக்கத்தினை ஏற்று, நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து டிவிட்டரை விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.