கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தள கட்சியின் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
Patna: ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து தனது முக்கிய உதவியாளர்களான பிரசாந்த் கிஷோர் மற்றும் பவன் வர்மா ஆகயோரை கட்சி தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் வெளியேற்றியுள்ளார். கடந்த சில வாரங்களாக பிரசாந்த் கிஷோருக்கும் நிதிஷுக்கும் இடையே குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது.
சீல நாட்களுக்கு முன்பாக பிரசாந்த் கிஷோர் குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ் குமார், யார் வேண்டுமானாலும் கட்சியை விட்டு செல்லலாம் என்று கூறியிருந்தார்.
கடந்த 2015-ல் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நிதிஷ் குமார் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில மாதங்களில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் வெளியேற்றம் நடந்திருக்கிறது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்துக் கூறியுள்ள பிரசாந்த் கிஷோர், 'நன்றி நிதிஷ் குமார். மீண்டும் நீங்கள் பீகார் முதல்வர் நாற்காலிக்கு வருவதற்கு வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று பவன் குமாரும் நிதிஷ் குமாருடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். 'சகிப்புத் தன்மை இல்லாததாக ஐக்கிய ஜனதா தளம் மாறிவிட்டது. சில கடினமான கேள்விகள் கேட்கப்படும்போது கட்சியால் அதனை எதிர்கொள்ள முடியவில்லை' என்று வெளிப்படையாக பவன் குமார் அறிக்கை வெளியிட்டார்.
கட்சியின் தேசிய துணை தலைவராக கடந்த 2018-ல் இருந்து பிரசாந்த் கிஷோர் இருந்து வருகிறார். கட்சியில் நிதிஷ் குமாருக்கு அடுத்த இடத்தில் அவர் இருந்தார்.
ஆனால் குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. உள்ளிட்ட விவகாரங்களில் பிரசாந்துக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தளம் நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பினார்.
கடந்த டிசம்பர் மாதமே அவர் கட்சியில் இருந்து விலகுவதாக இருந்த நிலையில், நிதிஷ் குமார் தலையீட்டால் இந்த முடிவு மாறியது.