This Article is From Feb 18, 2020

பீகார் ஏன் பின்தங்கி உள்ளது? நிதீஷ் குமாருக்கு பிரசாந்த் கிஷோர் சரமாரி கேள்வி!

பாஜகவுடன் கூட்டணியில் இருக்க கருத்தியல் ரீதியாக சமரசம் செய்து கொண்டாரா பீகார் முதல்வர் நிதிஷ் குமார் என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகார் ஏன் பின்தங்கி உள்ளது? நிதீஷ் குமாருக்கு பிரசாந்த் கிஷோர் சரமாரி கேள்வி!

நிதீஷ் குமாரின் ஜே.டி.யு கட்சியிலிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் விளக்கம்.

Patna:

ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து தேர்தல் வல்லுனர் பிரசாந்த் கிஷோர் கடந்த மாதம் வெளியேற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக அவர் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று பிகார் அரசியல் பக்கம் திரும்பிய பிரசாந்த் கிஷோர், தனது முன்னாள் அரசியல் வழிகாட்டியான நிதிஷ் குமாருக்கு அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளார். 

இந்த ஆண்டு நடைபெற உள்ள பீகார் தேர்தல் தொடர்பாக பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணியில் இருக்க கருத்தியல் ரீதியாக சமரசம் செய்து கொண்டாரா பீகார் முதல்வர் நிதிஷ் குமார் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பீகாரின் வளர்ச்சி குறித்தும், மாநில அரசின் செயல்திறன் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

கட்சியின் சித்தாந்தம் குறித்து எனக்கும் நிதிஷ்-ஜிக்கும் இடையே பல ஆலோசனைகள் நடந்துள்ளது. அப்போதெல்லாம், காந்தியின் கொள்கையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது என என்னிடம் கூறிய நிதிஷ்-ஜி, தற்போது, காந்தி கொலைக்கு காரணமான நாதுராம் கோட்சே மீது மென்மையாக இருப்பவர்களுடன் இணக்கமாக உள்ளார். என்னை பொருத்தளவில், காந்திஜியும், கோட்சேவும் கைகோர்த்து செல்ல முடியாது என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், கடந்த 2005 மற்றும் 2015ம் ஆண்டுகளுக்கு இடையில் பீகாரில் மிகக் குறைந்த அளவிலே முன்னேற்றமடைந்ததாக கூறும் தரவுகள் குறித்து தன்னை எதிர்கொள்ளுமாறு நிதீஷ்குமார் மற்றும் அவரது அரசுக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

பீகார் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மற்ற மாநிலங்களுடன் நாம் அதனை ஒப்பிட்டு பார்க்கும்போது, பீகார் இன்றும் கூட வளர்ச்சி அடையவில்லை என்பதை நாம் காண முடிகிறது.. அது ஏன்? 2005ல் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. ஜார்கண்ட்டை தவிர்த்து, பீகார் என்பது இன்னும் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது. 2005ல் பீகார் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இன்னும் பின்தங்கிய நிலையிலே உள்ளது என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். 

சமீப காலமாக பிரசாந்த் கிஷோருக்கும், கட்சித்தலைவர் நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டுக்கும் நிதிஷ் குமார் ஆதரவு அளித்து வந்தார். ஆனால் இவற்றை பிரசாந்த் கிஷோர் எதிர்த்து வந்தார். இது தொடர்பாக வெளிப்படையாக கருத்தும் தெரிவித்து வந்தார்.

பிரசாந்த் கிஷோரின் நிலைப்பாட்டிற்கு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பவன் வர்மாவும் ஆதரவு கொடுத்தார்.  இது நிதிஷ் குமாருக்கு தலைவலியாக அமைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் திடீரென பிரசாந்த் கிஷோரையும், பவன் வர்மாவையும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து நிதிஷ் குமார் அதிரடியாக நீக்கினார். 

கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறும்போது, நிதீஷ் குமார் என்னை ஒரு மகனாகவே பார்த்தார், நான் எப்போதும் அவரை ஒரு தந்தையாகவே பார்த்து வருகிறேன். அவர் என்னை கட்சியில் இணைத்தாலும், வெளியேற்றினாலும், நான் எப்போதும் அவரை மதிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

.