This Article is From Oct 16, 2018

ஐக்கிய ஜனதா தள துணைத் தலைவராக பிரசாந்த் கிஷோர் நியமனம்

பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர் பீகாரின் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் சமீபத்தில் இணைந்தார்

ஐக்கிய ஜனதா தள துணைத் தலைவராக பிரசாந்த் கிஷோர் நியமனம்

பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாருடன் பிரசாந்த் கிஷோர்.

New Delhi:

சமூக வலை தளங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு பல்வேறு திறமை மிக்க நபர்களை அரசியல் கட்சிகள் நியமித்து வருகின்றன. அந்த வகையில் 2014 மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடியின் பிரசார ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருந்தார்.

தேர்தலில் மோடி வெற்றி பெற்றதற்கு பின்னர் அவர் மிகவும் பிரபலம் அடைந்தார். இதன்பின்னர் பல்வேறு மாநில தேர்தல்களில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் கிஷோர் ஆலோசகராக விளங்கினார்.

சமீபத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சியில் சேர்ந்த அவருக்கு முக்கிய பொறுப்பு ஏதேனும் அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் அவரை கட்சியின் துணைத் தலைவராக நியமித்து, பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் துணைத் தலைவர் பதவி என்பது கட்சியின் தலைவர் பதவிக்கு அடுத்து சக்திமிக்க பொறுப்பாகும். இந்த தகவலை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டதன் மூலம் சமூக வலை தளங்களில் தங்களது கட்சி இன்னும் மக்கள் மத்தியில் சென்றடையும் என்று கே.சி. தியாகி கூறினார்.

.