நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் ஒலித்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.
New Delhi: டெல்லியில் ஒரு அரசு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (President Ramnath Govind), மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த பெண் போலீஸ் ஒருவர், திடீரென்று சுருண்டு விழுந்துள்ளார். இதைப் பார்த்த மேடையிலிருந்த குடியரசுத் தலைவர், நிதி அமைச்சர் ஆகியோர் பதறியடித்துக் கொண்டு கீழே வந்தனர். இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை நெகிழச் செய்துள்ளது.
பிடிஐ செய்திகள் நிறுவனம் அளித்த தகவல்படி, தேசிய சிஎஸ்ஆர் விருதுகள் விழா டெல்லியில் நடைபெற்றது என்றும், அதில்தான் மேற்குறிப்பிட்ட முக்கிய புள்ளிகள் பங்கேற்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புக்காக விருது வழங்கும் விழாவில் இருந்த பெண் போலீஸ் ஒருவர், தனது கணுக்காலில் ஏற்பட்ட வலி காரணமாக சுருண்டு விழுந்துள்ளார். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் ஒலித்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.
தேசிய கீதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மேடையிலிருந்து ராம்நாத் கோவிந்த், நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடனடியாக பெண் போலீஸுக்கு அருகில் வந்து, நலம் விசாரித்தனர்.
பெண் போலீஸ் நல்ல உடல்நிலையுடன் தான் இருக்கிறார் என்பதை அறிந்த பின்னர்தான் தலைவர்கள், அங்கிருந்து புறப்பட்டனர். இந்த நெகிழச் செய்யும் சம்பவத்தைப் பார்த்த அரங்கில் இருந்தவர்கள், தலைவர்களை கரகோஷம் எழுப்பி வழியனுப்பி வைத்தனர்.
(With inputs from PTI)