ஒரு வருடத்திற்கு பிரதமர் உட்பட அனைத்து எம்.பிக்களின் சம்பளத்தில் 30% குறைப்பு!
ஹைலைட்ஸ்
- பிரதமர் உட்பட அனைத்து எம்.பிக்களின் சம்பளத்தில் 30% குறைப்பு
- எம்.பிக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தம்
- இதன் மூலம் ரூ.7,900 கோடி சேமிக்கப்படும்
New Delhi: கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பிரதமர் உட்பட அனைத்து எம்.பிக்களுக்கும் ஒரு வருடத்திற்கு 30 சதவீத சம்பளம் குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று முதன் முறையாக கொரோனா நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வீடியோ காட்சி மூலம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு உட்பட அனைத்து மாநில ஆளுநர்களும் ஒரு வருடத்திற்கு 30 சதவீத சம்பள குறைப்பை மேற்கொள்ளுமாறு தாமாக முன்வந்து முடிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ஏப்.1ம் தேதி முதல் ஒரு வருடத்திற்குப் பிரதமர் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களுக்கும் 30 சதவீத சம்பளம் குறைக்கப்படும். இதேபோல், எம்.பிக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுகிறது.
இதன் மூலம் ரூ.7,900 கோடி சேமிக்கப்படும் என்றும், அந்த பணம் நாட்டின் ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லும் என்றும் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜகவின் 40-வது நிறுவன நாள் தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் ஒரு நீண்ட போராக இருக்கும், ஆனால், அதற்காக நாம் சோர்ந்துவிடக்கூடாது. இந்த போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.