நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தில் நம்பிக்கை வைக்க குடியரசு தினம் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றார் ஜனாதிபதி
New Delhi: நாளை நாட்டின் 70வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை சொன்னபடி தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி கோவிந்த், ‘குடியரசு நாளன்று ஜனநாயகக் கூறுகளை நினைவுகூர்ந்து பார்ப்பது சரியாக இருக்கும்' என்றார். நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தில் நம்பிக்கை வைக்க குடியரசு தினம் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் பேசினார்.
அவரது பேச்சின் ஹைலைட்ஸ்:
1.நமது குடியரசுக்கு இந்த ஆண்டு கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும். காரணம், அக்டோபர் 2-ம் தேதி, 150வது காந்தி ஜெயந்தியை நாம் கொண்டாடப் போகிறோம். அவரது கொள்கைகளை புரிந்து, நடைமுறைப்படுத்துவோம்.
2.நமது தேசம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இன்று நாம் எடுக்கும் முடிவு, எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
3.இந்த ஆண்டு நமக்கு இன்னொரு வகையிலும் முக்கியமானது. லோக்சபா தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
4.எந்த சமூகம், மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் வளங்கள் மீது சம உரிமை உள்ளது.
5.வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது பலம். நாம் உலகத்துக்கே முன்னுதாரணமாக இருந்து வருகிறோம்.
6.சமூக நீதி மற்றும் பொருளாதார நியதிகளை கடைபிடித்து வருவதால், ஒன்றுபட்ட வளர்ச்சியை நாம் கண்டு வருகிறோம்.
7.நமது தேசம் பெரும் பயணத்தை கடந்து வந்துள்ளது. நாம் இன்னும் நிறைய இலக்குகள் வைத்து தொடர்ந்து முன்னேர வேண்டும்.
8.நமது பெண் மற்றும் ஆண் குழந்தைகளின் திறமைகளை ஒன்றாக பார்க்கும் வகையிலான சமூகமாக நாம் திகழ வேண்டும்.
9.நமது கலாசாரம், பாரம்பரியம் எப்போதும் பொதுச் சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதனால்தான் பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களை நாம் உயர்வாக பார்க்கிறோம்.