This Article is From Jun 20, 2018

ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலானது!

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பாஜக நேற்று அறவித்தது.

ஹைலைட்ஸ்

  • கூட்டணி முறிவு ஏற்பட்டவுடன் மாநில முதல் மெஹுபூபா முப்டி ராஜினாமா செய்தார்
  • நேற்று மஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பாஜக அறிவித்தது
  • 2014-ம் ஆண்டு முதல் இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி இருந்தது
New Delhi/Srinagar: ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பாஜக நேற்று அறவித்தது. இந்நிலையில், இன்று அங்கு ஆளுநர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கட்சிக்கும் நிர்ணயிக்கப்பட்ட பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் முப்டி முகமது சய்யத் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி மொத்தம் இருக்கும் 87 தொகுதிகளில் 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, பாஜக 25 இடத்தில் வெற்றி பெற்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக, மஜக உடன் கூட்டணி வைத்தது. இதையொட்டி மஜக, கட்சியின் தலைவர் முப்டி முகமது சய்யத் முதல்வரானார். அவர் இறந்ததை அடுத்து அவரின் மகளான மெஹுபூபா முப்டி முதல்வரானார். 

இந்த அனைத்து சம்பவங்களின் போதும் பாஜக - மஜக கூட்டணி தொடர்ந்தது. ஆனால், சமீப காலமாக இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து மோதல் நிலவி வந்தது. குறிப்பாக, ரம்ஜானை ஒட்டி காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டிருந்தது மத்திய அரசு. மீண்டும் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு வலியுறுத்தி வந்தது மத்திய அரசு. ஆனால், இது மாநில அரசுக்கு உகந்ததாக இருக்கவில்லை. 

இதனால், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக-வின் பொதுச் செயலாளர் ராம் மாதவ், ‘நாங்கள் மஜக உடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளோம். இனியும் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் மஜக கூட்டணியில் தொடர முடியும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதம் தலை தூக்கி வருகிறது. சுஜாத் புகாரியின் கொலை அதற்கு ஒரு சான்று மட்டுமே’ என்று தெரிவித்தார். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நடந்த விஷயம் குறித்து கடிதம் எழுதினார். கூட்டணி முறிந்த சில மணி நேரங்களிலேயே மாநில முதல்வர் மெஹுபூபா முப்டி, ராஜினாமா கடிதத்தை சமர்பித்தார். இதையடுத்து, இன்று ஆளுநர் ஆட்சி அங்கு அமலானது.

இந்த கூட்டணி முறிவு குறித்து மெஹுபூபா முப்டி, ‘இந்த கூட்டணி முறிவு குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. மஜக என்றும் அதிகாரத்திற்காக தஞ்சம் அடைந்ததில்லை. என்றும் மக்களுக்காகத் தான் ஆட்சி நடத்தும்’ என்று கூறினார். 

மறுபடியும் காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அம்மாநில காவல் துறை தலைவர், ‘மீண்டும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரமஜானை ஒட்டி கடந்த சில நாட்களாகத்தான் அந்தப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இப்போது மீண்டும் அப்பணிகள் முடுக்கிவிடப்படும். உண்மையில், தற்போது அந்தப் பணிகளைச் செய்வது சுலபமாகத் தான் இருக்கும்’ என்று பதிலளித்துள்ளார். 
.