Budget Session 2020: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.
New Delhi: போராட்டத்தின் பெயரில் நிகழும் வன்முறைகள் நாட்டை பலவீனப்படுத்துகிறது, ஆரோக்கியமான விவாதம் ஜனநாயகத்தை பலப்படுத்தும் என்பதை அரசு நம்புகிறது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை துவங்கி வைத்து உரையாற்றினார்.
சிறுபான்மையின முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானதாக பார்க்கப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிராமப்புறம் மற்றும் நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கானோர் கடந்த மாதம் முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் போராட்டம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சிஏஏவுக்கு எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களின் போது பல வன்முறை சம்பங்களும் நிகழ்ந்தது. இதன் காரணமாக பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டன. நேற்றைய தினம் டெல்லி ஜாமிய மில்லியா பல்கலைக்கழகத்திற்கு அருகே சிஏஏவுக்கு எதிராக நடந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் புகுந்த ஒரு வலதுசாரி இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதன் மூலம் மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியுள்ளது என ராம்நாத் கோவிந்த் கூறினார். இதைத்தொடர்ந்து, பாஜக எம்.பிக்களின் கைதட்டல்களுக்கு மத்திதயில், எதிர்கட்சி உறுப்பினர்கள் சிஏஏ குறித்த குடியரசுத்தலைவரின் இந்த கருத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும். மத துன்புறுத்தல் காரணமாக 3 முஸ்லீம் ஆதிக்க நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்தியாவுக்கு தப்பி வந்தால், அவர்கள் குடியுரிமை பெற இந்தச் சட்டம் உதவும் என்று அரசு கூறுகிறது. ஆனால், இது முஸ்லிம்களுக்கு பாகுபாடு பார்க்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பின் மதச்சார்பின்மையை மீறுவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கி வரப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையான உரிமைகளைப் பெற்றிருப்பது இந்திய மக்களிடையே மகிழ்ச்சியை அளிப்பதாக கூறியுள்ளார்.