This Article is From Nov 20, 2018

கஜா புயல் குறித்து தமிழக முதல்வரிடம் விசாரித்த குடியரசு தலைவர்

புயலால் பாதிக்கப்பட்டவர்களின் துயரமான தருணத்தில் தானும் பங்கெடுத்துக் கொள்வதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்

கஜா புயல் குறித்து தமிழக முதல்வரிடம் விசாரித்த குடியரசு தலைவர்

கடந்த 16-ம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

Chennai:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்பு குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.

தமிழகத்தை கடந்த 16-ம் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் நாகை, திருவாரூர், தஞ்சை, உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 25 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. புயல் பாதிப்பில் மட்டும் 45 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் புயல் பாதிப்பு குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து ராம்நாத் கோவிந்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ தமிழக முதல்வரிடம் கஜா புயல் பாதிப்பு குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொண்டேன். தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த துயரம் நிறைந்த தருணத்தில், மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலில் மட்டும் 1.7 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. சுமார் 88,102 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளது.

கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

.