டிரம்ப், செய்தியாளர்களுக்கு எதிராகவும் செய்தி நிறுவனங்களுக்கு எதிராகவும் சண்டையிடுவது இது முதன் முறையல்ல.
ஹைலைட்ஸ்
- நேற்று இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது
- சீன வம்சாவளி நிருபர் டிரம்பிடம் கேள்வி கேட்டார்
- சிபிஎஸ் நிறுவனத்தின் நிருபர்தான், டிரம்பிடம் கேள்வி கேட்டது
Washington: அமெரிக்க அரசு தரப்பு, நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விளக்க செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பெண் நிருபர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்குவாதத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பையும் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு, கோபத்துடன் நடையைக் கட்டியுள்ளார் டிரம்ப்.
சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர், வெய்ஜியா ஜியாங், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “கொரோனா வைரஸ் குறித்த சோதனையில் அமெரிக்கா, மற்ற நாடுகளைவிட மிகவும் முன்னணியில் உள்ளதாக நீங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். இது ஏன் ஒரு பெரிய விஷயமாக சொல்லப்பட வேண்டும். தினம் தினம் அமெரிக்கர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து வரும் சூழலில் இந்த உலகளாவிய போட்டி மனப்பான்மை ஏன்?” என டிரம்புக்குக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிரம்ப், “உலகளவில் பலரும் உயிரிழந்து வருகிறார்கள். இந்தக் கேள்வியை நீங்கள் சீனாவிடம்தான் கேட்க வேண்டும். என்னைக் கேட்காதீர்கள். சீனாவைக் கேளுங்கள். ஓகே?” என கோபத்துடன் பதில் அளித்தார்.
ஜியாங்க், சீனாவில் பிறந்த மேற்கு விர்ஜினியாவைச் சேர்ந்தவர் என்று தன்னை ட்விட்டரில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
“இந்தக் கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்பதற்கான காரணம் என்ன?” என ஜியாங், தன் வம்சவளியைச் சுட்டிக்காட்டும் வகையில் டிரம்பை மீண்டும் கேட்டார்.
“இதைப் போன்ற மூர்க்கத்தனமாக கேள்வியை யார் கேட்டிருந்தாலும் இப்படித்தான் பதில் அளித்திருப்பேன்,” என உஷ்ணமானார் டிரம்ப்.
ஜியாங்கின் கேள்விக்கு பதில் அளித்துவிட்டதாக, அடுத்த நிருபரின் கேள்வியைக் கேட்கச் சொன்னார் டிரம்ப்.
மீண்டும் இன்னொரு பெண் நிருபரையே கேள்வி கேடகச் சொன்னார் டிரம்ப். அந்த நிருபர் கேள்வியை ஆரம்பிக்க முனையும்போது, இன்னொருவரிடம் கேள்வி கேட்குமாறு பணித்தார்.
ஆனால், அந்தப் பெண் நிருபர் தொடர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தபோது, செய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்துவிட்டு கிளம்பிவிட்டார் டிரம்ப்.
இந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து இணையத்தில் #StandWithWeijiaJiang என்கிற ஷாஷ்-டேக் டிரெண்ட் ஆனது.
இதற்கு முன்னர் டிரம்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிஎன்என் செய்தியாளர் ஏப்ரல் ரையன், “எங்கள் கிளப்பிற்கு உங்களை வரவேற்கிறோம் ஜியாங். அவர் எப்போதும் இப்படித்தான் நடந்து கொள்வார்,” என ட்வீட்டினார்.
டிரம்ப், செய்தியாளர்களுக்கு எதிராகவும் செய்தி நிறுவனங்களுக்கு எதிராகவும் சண்டையிடுவது இது முதன் முறையல்ல. இதற்கு முன்னரும் பல முறை இதைப் போன்று நடந்து கொண்டுள்ளார் டிரம்ப்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தகவல் தெரிவிக்கிறது. உலகளவில் அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.