குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது வியட்நாம் நாட்டில் உள்ளார்.
Melbourne: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை முதல் ஆஸ்திரேலியாவில் 4 நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனை சந்திக்கும் ராம்நாத் கோவிந்த் அவரிடம் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தற்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வியட்நாம் நாட்டில் உள்ளார். அந்நாட்டின் ஹனோய் நகரில் இருந்து புறப்படும் அவர் சிட்னிக்கு நாளை சென்றடைகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
தனது பயணத்தின்போது நியூ சவுத் வேல்ஸில் மகாத்மா காந்தியின் சிலையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கவுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நினைவாக இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய பயணத்தின்போது இந்திய வம்சாவளியினரை சந்தித்து குடியரசு தலைவர் பேசவுள்ளார். அவருடன் மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே, எம்.பி.க்கள் கமாக்யா பிரசாத், ஹீனா விஜய் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.