சிதம்பரம் கைதுக்கு பயந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.
New Delhi: 'யாரும் ஓடி ஒளிந்துவிடவில்லை; வழக்கை சந்திக்க விரும்புகிறோம்' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஊடகங்களுக்கு பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரத்தை அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்த நிலையில், முன் ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தான் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. வழக்கை சந்திக்க விரும்புவதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று அவர் அளித்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது-
நாங்கள் எல்லோரும் வழக்கை எதிர்கொள்ளத்தான் விரும்புகிறோம். யாரும் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சட்டத்திலிருந்து நான் ஒளிந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுவதை மறுக்கிறேன். நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.
தெளிவான தீர்க்கமான பார்வையுடன் என் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வேன். விசாரணை அமைப்புகள் சட்டத்தின்படி செயல்படும் என்று நம்புகிறேன். இதற்காக பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.
இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.
கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் (P Chidambaram) இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.