தேர்தல் தேதிகள் வெளியிடப்பட்ட உடன், மத்திய அரசு எந்த வித திட்டங்களையும் அறிவிக்க முடியாத வகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
ஹைலைட்ஸ்
- கடந்த மாதத்தில் இந்தியாவுக்குள்ளேயே தொடர் பயணத்தில் இருந்துள்ளார் மோடி
- பிப்., 8 முதல் மார்ச் 9 வரை மட்டும் 157 திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்
- இதில் சில திட்டங்கள் முன்னரே தொடங்கப்பட்டவையாகும்
New Delhi: இன்று மாலை தேர்தல் ஆணையம், லோக்சபா தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி, 157 திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் என்பதை NDTV தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. இந்தத் திட்டங்களைத் தொடங்கி வைக்க மோடி, நாட்டில் 28 இடங்களுக்கு பயணம் செய்துள்ளார்.
தேர்தல் தேதிகள் வெளியிடப்பட்ட உடன், மத்திய அரசு எந்த வித திட்டங்களையும் அறிவிக்க முடியாத வகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
ஆனால், பிப்ரவரி 8 முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை மட்டும், நெடுஞ்சாலை, ரயில்வே துறை, மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்கள், விமானநிலையங்கள், மின்சார ஆலைகள் மற்றும் பல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி.
அதே நேரத்தில், 2014 தேர்தல் நெருங்கும் போது, பிரதமர் மன்மோகன் சிங், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் முதல் எந்தவிதப் பயணங்களையும் செய்யவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 8 முதல் பிப்ரவரி 7 வரை, பிரதமர் மோடி, 57 திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். அந்த எண்ணிக்கை அடுத்த ஒரு மாதத்தில் மும்மடங்கு உயர்ந்துள்ளன.
பிரதமர் அலுவலக தளத்தில் இருந்தும், அரசு சார்பில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் இருந்தும் இது குறித்த தகவல்கள் பெறப்பட்டன.
பிரதமர் மோடி, துவக்கி வைத்த திட்டங்களில் சில முன்னரே தொடங்கபட்ட திட்டங்கள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
உதாரணத்திற்கு, இந்த மாத ஆரம்பத்தில் உத்தர பிரதேச அமேதியில் ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து துப்பாக்கிகள் தயாரிக்கும் ஆலை ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால், இந்த ஆலைக்கான தொடக்க விழா 2007 ஆம் ஆண்டே நடத்தப்பட்டது என்று அரசு ஆவணங்கள் சொல்கின்றன. மேலும், ஆலையில் தயாரிப்புப் பணிகள் 2010 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கின்றன ஆவணங்கள்.
அதேபோல பிகாரின் கரமாலிசக்கில், பாதாள சாக்கடைத் திட்டம் ஒன்றுக்கு பிப்ரவரி 17 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இதே திட்டத்துக்கு 2017 அக்டோபரிலும் அடிக்கல் நாட்டியுள்ளார் பிரதமர் மோடி.
மொத்தமாக தொடங்கப்பட்ட திட்டங்களில் 140, மிகவும் சிறியவையாகும். அதைப் பிரதமர் தொடங்கி வைத்திருக்க வேண்டுமா என்கின்ற கேள்வியும் எழுகிறது. உதாரணத்திற்கு சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் வழித் தடத்தைத் தொடங்கி வைத்தது, கர்நாடகாவில் ரயில் வழித் தடத்தை திறந்து வைத்தது, விக்கிரவாண்டி - தஞ்சைக்கு இடையில் 4 வழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தது, காரைப்பட்டி - வாலாஜாபாத் இடையில் 6 வழிச் சாலையை தொடங்கி வைத்தது உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.
சில திட்டங்கள் முனிசிபாலிட்டி அளவிலான திட்டங்கள் என்று தெரிகிறது. உதாரணத்திற்கு காசியாபாத் முனிசிபாலிட்டியில் மாட்டுக் கொட்டகை திறந்து வைத்ததைச் சொல்லலாம்.
பிரதமர் மோடி, 17 திட்டங்களை வீடியோ கான்ஃபெரன்சிங் மூலமும் திறந்து வைத்துள்ளார். இது குறித்தெல்லாம் பிரதமர் அலுவலகத்துக்கும் செய்தித் தொடர்புத் துறைக்கும் கேள்வி கேட்டும் பதில் வரவில்லை.