சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்கிரஸின் நிலைப்பாட்டை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார் மோடி
ஹைலைட்ஸ்
- ராஜஸ்தானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியுள்ளார்
- சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்கிரஸின் நிலைப்பாட்டை விமர்சித்தார் மோடி
- டிசம்பர் 7-ல் ராஜஸ்தானில் தேர்தல் நடக்க உள்ளது
Bhilwara, Rajasthan: பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸை வறுத்தெடுத்துள்ளார். குறிப்பாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்கிரஸின் நிலைப்பாட்டை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிரசாரத்தின் போது மோடி, ‘நமது ராணுவத்தினர், எதிரிகளின் இடத்திற்கே சென்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய போது, மொத்த நாடும் பெருமை கொண்டது. ஆனால், காங்கிரஸ், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கு வீடியோ ஆதாரம் கேட்டது. ராணுவ வீரர்கள் கேமராவை வைத்துக் கொண்டா தாக்குதல் நடத்துவார்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.
அவர் தொடர்ந்து, ‘நான் எப்போதாவது விடுமுறை எடுத்துள்ளேன் என்று கேள்விப்பட்டுள்ளீர்களா? நான் ஓய்வுக்காக எங்காவது சென்றிருக்கிறேனா? ஒவ்வொரு நாளும் நான் என்ன செய்கிறேன் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகிறேன்' என்றார்.
மேலும் அவர், ‘காங்கிரஸ், நக்சல் இயக்கத்தினரை புரட்சியாளர்கள் என்று அடையாளப்படுத்துகிறது. நமது பாதுகாப்புப் படை வீரர்களை கொலை செய்பவர்களை எப்படி புரட்சியாளர்கள் என்று சொல்ல முடியும். பாஜக ஆட்சியில் நக்சல் இயக்கத்துக்கு அவர்களின் மொழியில் பதிலடி கொடுக்கப்பட்டது' என்று பேசினார்.
டிசம்பர் 7 ஆம் தேதி ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அடுத்த சில நாட்களில் 10 பிரசாரக் கூட்டங்களில் பங்கு கொள்ள உள்ளார் பிரதமர் மோடி.