சமூக மாற்றத்துக்கான தூதவர்கள் இளைஞர்கள் தான், பிரதமர் மோடி
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி, புதியதாக ‘ஸ்வச்சடா ஹை சேவா’ என்கின்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். அவர் நாட்டு மக்களையும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி, ‘அக்டோபர் 2 ஆம் தேதி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நாம் கொண்டாட உள்ளோம். அதே நாளில் தான் ‘தூய்மை இந்தியா’ திட்டம் 4 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மகாத்மாவின் கனவான சுத்தமான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டத் திட்டமே தூய்மை இந்தியா. இதற்காக வேலை செய்யும் அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன்’ என்றார்.
அவர் தொடர்ந்து ட்விட்டரில், ‘ஸ்வச்சடா ஹை சேவா இயக்கம், செப்டம்பர் 15-ல் ஆர்மபிக்கிறது. இது மகாத்மாகவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். இதில் பங்கெடுத்து, தூய்மையான இந்தியாவை உருவாக்க உங்களால் ஆன பங்கை செலுத்துங்கள்’ என்று கூறி, முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த புதிய இயக்கம் தொடர்பாக அவர் மாநில முதல்வர்கள், தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த புதிய இயக்கத்தின் தொடக்கத்தையொட்டி, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் பள்ளிக் குழந்தைகள், ஆன்மிக தலைவர்கள், ராணுவ வீரர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுடன் உரையாடினார்.
வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் உரையாடிய மோடி, ‘சமூக மாற்றத்துக்கான தூதவர்கள் இளைஞர்கள் தான். சுகாதாரத்துக்கான செய்தியை அவர்கள் முன்னெடுத்துச் சென்ற விதத்தைப் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்தியாவின் நேர்மறை மாற்றங்களின் முன்னோடியாக இளைஞர்கள் இருக்கின்றனர். சுத்தம் என்பது ஒரு பழக்கம் தான். அதை ஒவ்வொரு நாளும் பின்பற்ற வேண்டும். மக்களின் மன மாற்றமும் சுத்தமாக இருப்பதற்கு முக்கியம்’ என்று பேசினார்.