நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள்.
ஹைலைட்ஸ்
- மோடி, அமித் ஷா பதவி விலகக்கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- டெல்லிவன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தல்
- நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 3 வரை நடக்கிறது.
New Delhi: டெல்லி வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லி கலவரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்திருக்கும் நிலையில், கலவரத்தைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக்கோரியும் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி கூறியதாவது-
வன்முறை டெல்லியில் நடந்திருக்கிறது. 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனவே இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். இதனை வலியுறுத்துவது என்பது ஜனநாயகம். அரசியல் அல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக டெல்லி வன்முறையை அரசியலாக்குவதாக பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதில் கூறியுள்ளார் மணிஷ் திவாரி.
நாடாளுமன்றம் இன்று தொடங்கியதும் டெல்லி வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. டெல்லியில் கடந்த 23-ம்தேதி தொடங்கி வன்முறை 25-ம்தேதி வரையில் நீடித்தது. இதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.
தற்போது பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி இன்று தொடங்கியது. இது ஏப்ரல் 3-ம்தேதி வரை நீடிக்கும்.