This Article is From Feb 25, 2020

‘கொரோனா வைரஸ் பாதிப்பை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார்’- மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருந்த 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், இன்னும் ஒருவரின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

New Delhi:

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புகளை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘கொரோனா வைரஸ் பாதிப்புகளை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார். இந்தியாவுக்கு இந்த வைரஸ் வந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீனா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். நாட்டின் 21 முக்கிய விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக ஜனவரி 17-ம்தேதிக்கு முன்பே முன்னெச்சரிக்கை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இதற்கு பின்புதான் உலக சுகாதார நிறுவனம் தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கங்களை வெளியிட்டது' என்று கூறினார்.

அண்டை நாடான சீனாவில் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிர்பலி மட்டும் 1,310-யை எட்டியுள்ளது.

முன்னதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், 'கொரோனா வைரஸ் என்பது இந்திய மக்களுக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. என்னைப் பொறுத்தளவில் மத்திய அரசு இந்த பிரச்னையை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. உடனடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

சீனாவை மையமாக கொண்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,113-யை தாண்டியுள்ளது. குறிப்பாக வைரஸ் முதலில் பரவிய ஹூபே மாகாணத்தில் பலி எண்ணிக்கை 97-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மொத்தம் 44,653 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் ஒருவருக்கு சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை ஏற்படும். இந்த வைரஸ் இதற்கு முன்பாக தாக்குதலை நடத்தவில்லை என்பதால் இதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 

.