பிரதமர் நரேந்திர மோடி, இன்று முக்கிய எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்ததிலிருந்து தகவல் வந்துள்ளது
New Delhi: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, எண்ணெய் நிறுவனங்களுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சனிக்கிழமை 82.66 ரூபாய் என இருந்த பெட்ரோல் விலை, நேற்று, 82.72 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.88.18, ரூ.84.54, ரூ.85.99 என இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலால் வரி மாறுபடுவதால், எரிபொருள் விலை வித்தியாசமாக இருக்கிறது. மேலும், சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் எரிபொருள் விலையேற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரியை 1.50 ரூபாய் குறைத்தார். மேலும், எண்ணெய் நிறுவனங்களையும் எரிபொருள் விலையை 1 ரூபாய் குறைக்கச் சொன்னது அரசு.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முக்கிய எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்ததிலிருந்து தகவல் வந்துள்ளது. ஈரானுக்கு எதிராக வரி விதிப்பை அமெரிக்கா, நவம்பர் 4 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்த உள்ள நிலையில், இன்று பிரதமரின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.