கடந்த 3 மாதங்களில் மட்டும் 31 ஆயிரம் கோடி ரூபாயை மக்களுக்கு நேரடிய பணமாக மத்திய அரசு அளித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு தளர்வு குறித்து உரையாற்றினார்
- மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்
- நவம்பர் வரையில் இலவச உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என மோடி அறிவிப்பு
New Delhi: நாடு முழுவதும் 80 கோடிப்பேருக்கு கடந்த 3 மாதங்களாக 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏழைகளுக்கு இலவச உணவுப்பொருள் வழங்கும் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வு 2.0 குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது-
இந்தியா கொரோனாவை எதிர்த்து தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், பருவமழைக் காலமும் தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படும் எனவே மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போது பொது முடக்கத்தின் 2-ம் கட்டமான ஊரடங்கு தளர்வு 2.0 தொடங்கி விட்டது.
நாம் சரியான நேரத்தில் பொது முடக்கத்தை கொண்டு வந்தோம். இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாக உள்ளது.
கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்ட போதிலும் மக்கள் சிலர் மாஸ்க் அணியாமல், தங்களது பொறுப்பை உணராமல் இருக்கிறார்கள். இது எனக்கு கவலை அளிக்கிறது. பொது முடக்க தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்போதுதான் நாம் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
சிறிய தவறை நாம் செய்து விட்டாலும், அதற்காக மிகப்பெரும் விலையை கொடுக்கும் நிலை ஏற்பட்டு விடும். பொது முடக்க காலத்தில் மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு குறைவாக உள்ளது.
பொது முடக்க காலத்தில் மக்கள் விதிகளை கவனத்துடன் கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறுவோருக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். 80 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் வரையில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் 31 ஆயிரம் கோடி ரூபாயை மக்களுக்கு நேரடிய பணமாக மத்திய அரசு அளித்துள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.
கூடுதலாக ரேஷன் பொருட்கள் வழங்கும் வகைக்காக ரூ. 90 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் பலன் பெறுவார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.