This Article is From May 08, 2019

ராகுல் காந்தியின் ‘லவ் அகராதி’… வறுத்தெடுத்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து வாதப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி, பரப்புரை கூட்டங்களில் பேசுவதையெல்லாம் கவனித்து அவருக்கு ராகுல் பதிலடி கொடுத்து வந்தார்

New Delhi:

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து வாதப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, பரப்புரை கூட்டங்களில் பேசுவதையெல்லாம் கவனித்து அவருக்கு ராகுல் பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில் ராகுலின் வாதங்களுக்கு, எதிர் வாதம் வைத்துள்ளார் பிரதமர் மோடி. 

“ராகுல், தனக்கென ஒரு ‘லவ் அகராதி' வைத்துள்ளார். அது குறித்து யாரும் கேள்வியெழுப்புவதில்லை. காங்கிரஸ், என் மீது தொடர்ந்து அவதூறு பேசி வந்ததன் மூலம் அவர்களின் மாண்பை எப்போதோ இழந்துவிட்டனர். 

லவ் அகராதியில் என்னதான் இருக்கிறது. அந்த அகராதியில் என்னென்ன வார்த்தைகள் உள்ளன. மோடி மீது அவர் எப்படி அகராதியின் வாயிலாக அன்பைப் பொழிய முடியும். 

காங்கிரஸ் என் தாயைப் பற்றி கூட கேவலமாக பேசியுள்ளது. என் தந்தை யாரென்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். என்னை கண்டந்துண்டமாக வெட்டி சாய்ப்பேன் என்று கூறியவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவாக நடந்து கொள்கிறது. அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு தந்துள்ளது” என்று கூறிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தரப்பு தன்னைப் பற்றி அவதூறாக பேசியுள்ள கருத்துகளை பட்டியலிட்டு உள்ளார். 

சில மாதலங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து, அன்பை வெளிப்படுத்தினார். அதிலிருந்து அவர், “மோடி மீது எனக்கு அன்பு மட்டும்தான் உள்ளது” என்று தொடர்ந்து பேசி வருகிறார். 

சில நாட்களுக்கு முன்னர் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, “ராஜீவ் காந்தி, இந்த நாட்டின் மிகப் பெரிய ஊழல்வாதி என்ற பெயருடன் இறந்து போனார்” என்று பேசினார். அதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
 

ராகுலோ, “போர் முடிந்தது மோடிஜி. உங்கள் கர்மா காத்திருக்கிறது. உங்களின் நம்பிக்கைகளை என் அப்பா மீது திணிப்பதன் மூலம் நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. உங்களுக்கு அளவு கடந்த அன்பு. ராகுல்” என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டார். 

.