New Delhi: பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி, நாட்டின் ஜனநாயகத்துடன் ஆபத்தான முறையில் விளையாடி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று பிரதமர் மோடி, தமிழகத்தில், உள்ள பாஜக உறுப்பினர்கள் பலரோடு வீடியோ மூலம் உரையாடினார். அப்போது பேசிய மோடி, ‘காங்கிரஸ் கட்சி, நாட்டின் ஜனநாயக அமைப்புகளுடன் ஆபத்தான முறையில் விளையாடி வருகிறது. அது ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆக இருக்கட்டும், தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நடவடிக்கையாக இருக்கட்டும், அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் அந்தக் கட்சி கேலிக் கூத்தாக மாற்றியுள்ளது.
அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, காங்கிரஸ் மேலும் மேலும் மூர்க்கமாக மாறி வருகிறது. அவர்கள் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பையே கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். முன்னர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையே அவர்கள் விமர்சனம் செய்தார்கள்.
ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அவர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வந்துவிட்டால், அது குறித்து எதுவும் பேச மாட்டார்கள்.
காங்கிரஸின் இதைப் போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை, நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதன் மூலமாக மட்டுமே சரிகட்ட முடியும். நாம் மக்களிடம் தொடர்ந்து உரையாட வேண்டும். காங்கிரஸ் எப்படிப்பட்ட கட்சி என்பது குறித்து நாம் மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும்' என்று பேசினார்.
எதிர்கட்சிகள் தொடர்ந்து, பாஜக-வை ஜனநாயக விரோத போக்குக்குக் கண்டித்து வரும் நிலையில், மோடி, காங்கிரஸைத் தாக்கி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘நாட்டின் ஜனநாயக அமைப்புகளான உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி போன்றவற்றை பாஜக அழிக்க நினைக்கிறது. அதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன்' என்று தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
பிரதமர் மோடி, பாஜக-வினர் மத்தியில் மேலும் பேசுகையில், ‘நாம், மத்திய அரசு மக்களுக்காக கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். சுகாதாரம், திறன் வளர்ப்பு, உணவுப் பாதுகாப்பு போன்ற, அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் விதத்தில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது குறித்து மக்களிடம் தீவிரமாக பரப்புரை செய்யுங்கள்' என்றார்.