‘அகிலேஷ், மாயாவதி ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தால், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட மாட்டார்கள்'
ஹைலைட்ஸ்
- உ.பி-யில் உருவாகியிருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி, மோடி
- எதிர்கட்சிகளின் ஒரே இலக்கு பிரதமர் பதவி மட்டும்தான், மோடி பேச்சு
- 'போன், இணைய வசதி எங்கள் ஆட்சியில்தான் அதிகரித்தது'
Hardoi (Uttar Pradesh): நாடாளுமன்றத் தேர்தலையொட்டி உத்தர பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ‘இங்கு அகிலேஷ், மாயாவதி இடையில் உருவாகியிருப்பது சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணி. சாதி அரசியலை பயன்படுத்தி பணத்தைக் கொள்ளையடிப்பதற்கான கூட்டணி' என்று கடுமையாக சாடியுள்ளார்.
பகுஜன் சமாஜ் பற்றி பிரதமர் மோடி பேசுகையில், ‘அம்பேத்கரை எதிர்த்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார் மாயாவதி. அம்பேத்கரின் பெயரில் ஓட்டு கேட்கும் சிலர், அவரிடமிருந்து எதையும் கற்கவில்லை. பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும்தான் இப்படி கொள்கை தவறி கூட்டணி வைக்க முடியும்' என்று சூசகமாக சொல்லி அகிலேஷ் யாதவை குறிப்பிட்டார்.
அவர் மேலும், ‘அகிலேஷ், மாயாவதி ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தால், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட மாட்டார்கள். காரணம், அவர்கள் உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த போது உள்ளூர் ரவுடிகளையே அடக்க முடியாமல் சிரம்பபட்டனர்' என்றார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சிக்க ஆரம்பித்தார். ‘5 ஆண்டுகளுக்கு முன்னர் போன் வசதியும் இணையதள வசதியும் இப்போது இருப்பது போன்று இருக்கவில்லை. இன்றைய சூழலில் உழைக்கும் மக்களின் நண்பனாக போன் இருக்கிறது. அவர்களின் வாழ்க்கையை அது பன்மடங்கு எளிமையாக்கி இருக்கிறது. உயர்த்தியுள்ளது' எனப் பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக உத்தர பிரதேசத்தில் வெகு நாள் அரசியல் எதிரியாக இருந்த சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. தேர்தலில் சமாஜ்வாடி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 38 இடங்களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் மற்றும் பாஜக உத்தர பிரதேசத்தில் தனித்து களமிறங்குகின்றன.