This Article is From Apr 29, 2019

‘அனைவருக்காகவும் வேண்டிக் கொள்கிறேன்!’- ஃபனி புயல் நெருங்கும் நிலையில் பிரதமர் ட்வீட்

ஃபனி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படையினர் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

‘அனைவருக்காகவும் வேண்டிக் கொள்கிறேன்!’- ஃபனி புயல் நெருங்கும் நிலையில் பிரதமர் ட்வீட்

மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில மற்றும் மத்திய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது.

New Delhi:

வங்கக் கடலில் தீவிரமடைந்து வரும் ஃபனி புயல், தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேச கடற்கரைகளை நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ‘அனைவரின் பாதுகாப்புக்காவும் வேண்டிக் கொள்கிறேன்' என்று டீவீட்டியுள்ளார். மேலும் அவர், சம்பந்தப்பட்ட அமைப்புகளை தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஃபனி புயல் குறித்த நிலைமையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடச் சொல்லியும் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்படும் என்ற எண்ணப்படும் மாநிலங்களுடன் இணைந்து பணி செய்யுமாறும் அவர்களிடம் கூறியுள்ளேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலத்துக்காவும் வேண்டிக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

ஃபனி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படையினர் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த 25 ஆம் தேதி முதலே, வங்கக் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம், பாதிக்கப்படும் என்று எண்ணப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை புயல் குறித்து தகவல் தெரிவித்து வருகிறது. அதேபோல மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில மற்றும் மத்திய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது. 

ஃபனி புயல் குறித்து சென்னையில் உள்ள வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று தெரிவிக்கையில், ‘சென்னையிலிருந்து சுமார் 820 கிலோ மீட்டர் தொலைவில் ஃபனி புயல் தற்போது நிலை கொண்டுள்ளது. அது தொடர்ந்து தீவிர புயலாகவும், நாளை அதி தீவிர புயலாகவும் உருவெடுக்கும். தமிழக கடற்கரை அருகே 300 கிலோ மீட்டர் அருகில் வரை இந்தப் புயல் வரும். இதனால் நாளை வடதமிழக கடலோரப் பகுதிகளில் சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அதேபோல நாளை மாலை சுமார் 60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

ஃபனி புயலால் வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் இருக்கும். எனவே அந்த இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறினார். 

(PTI & ANI தகவல்களுடன்)

.