Jujwa, Gujarat: இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை 2022-ம் ஆண்டு கொண்டாடும் போது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது தன்னுடைய கனவாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குஜராத்தின் வல்சாத் பகுதியில் உள்ள ஜூஜ்வா கிராமத்தினர் மத்தியில் பேசுகையில், ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகள் மிகவும் தரமான முறையில் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக யாரும் ஒரு ரூபாய் கூட லஞ்சமாகக் கொடுக்கத் தேவையில்லை’ எனப் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், ‘குஜராத் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் ஏராளம். இந்தப் பாடம் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு கனவை நிறைவேற்றுவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டேன். நம்முடைய தேசம் தனது 75-வது சுதந்திர தினத்தை 2022-ம் ஆண்டு கொண்டாடும் போது சொந்த வீடு இல்லாத ஒரு குடும்பம் கூட நம் நாட்டில் இருக்கக் கூடாது’ எனத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளர்கள் உடன் கானொளி மூலம் பேசிய மோடி, “தாய்மார்களும் சகோதரிகளும் இனி தங்களுக்கென ஒரு சொந்த வீடு எந்தவித லஞ்சமும் இல்லாமல் முறைப்படி கட்டப்பட்டுள்ளது எனத் திருப்தியுடன் கூறலாம்”.
“இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வீடும் எவ்வாறு கட்டப்பட வேண்டும், என்ன மாதிரியான கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என அனைத்தையுமே அந்தக் குடும்பம் தான் முடிவு செய்கிறார்கள். ஒப்பந்ந்ததாரர்களை நம்பாமல் அந்தக் குடும்பத்தைத் தான் நாங்கள் நம்புகிறோம். ஒரு குடும்பம் தனக்கான வீட்டைக் கட்டும்போது அது சிறந்ததாகத் தான் இருக்கும்” என்றார்.
மத்திய அரசின் இந்தத் திட்டம் மூலம் இதுவரையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று காலை குஜராத்துக்கு வந்தார். பின்னர் வல்சாத் சென்றார். அடுத்து ஜுனாகத் பகுதியில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். அதன் பின்னர் காந்திநகரில் உள்ள குஜராத் தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இறுதியாக சோம்நாத் கோயில் நிர்வாகிகள் உடன் அங்குள்ள ராஜ் பவனில் ஒரு சந்திப்பில் பங்குபெறுகிறார்.